
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு நகரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று இரவும், இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. மத்திய மராட்டியத்தில் நிலவிய காற்றழுத்தம் கிழக்கு-வடகிழக்கு நோக்கி மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் கடந்து சென்றது. இதனால், அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கனமழையால் இன்று காலை குர்லா, சியான், தாதர் மற்றும் பரேல் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வாகன போக்குவரத்தும் முடங்கியுள்ளது. மும்பையின் நாரிமன் பாயிண்ட் பகுதியில் இன்று காலை 6 முதல் 7 மணி வரையில் 40 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
நகரின் கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் லேசான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், மும்பை, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு இன்று நாள் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், தேவையின்றி வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என மும்பை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.






