
மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
புதுடெல்லி,
மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்கி வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தாலும், 134 அடியில் தண்ணீரை திறந்து விடுகிறார்கள் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். அதேபோல், மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
மேலும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை கைவிட வேண்டும், முல்லைப் பெரியாறு அணைக்கு தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க வேண்டும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






