
பள்ளிக்கரணை சதுப்பு நில கட்டட பணிகளை நிறுத்த ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்பு கட்டும் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சதுப்பு நிலப் பகுதியில் 1,400 குடியிருப்புகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்கியது சட்டவிரோதமானது என்று மனுதாரர் தெரிவித்திருந்தார்.
தமிழக அரசு தரப்பில், "சதுப்பு நிலத்தில் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்த ஆய்வுப் பணிகள் 2 வாரங்களில் முடியும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்படும் கட்டடத்திற்கு சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, "சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தெரியாமல் கட்டுமானத்திற்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கியது எப்படி" என்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்பு கட்டும் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் இந்த மனு மீது வருகிற நவம்பர் 12-ந்தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.






