கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

பைசன் பட நடிகர் துருவ் விக்ரம் கபடி வீரர் அபினேஷை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்றன. இந்திய ஆடவர் அணியில், திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் (வயது 17) இடம் பெற்றிருந்தார். அவரை பாராட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, கபடி வீரர் அபினேஷை நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பைசன் பட நடிகர் துருவ் விக்ரம் கபடி வீரர் அபினேஷை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். மேலும், அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "தேசத்தை பெருமைப்படுத்திய இளம் காளை. ஒவ்வொரு சகாப்தத்திற்கும் அதன் சொந்த பைசன் உள்ளது. இது அவருடையது. வாழ்த்துகள் தம்பி அபினேஷ். நீங்கள் எனக்கும், நம்பிக்கையுடன் கனவு காணும் ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு உத்வேகம்." என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.






