"நடிகனாகும் முன்.." - துபாய் வாழ்க்கை நினைவுகளை பகிர்ந்த விஜய் சேதுபதி


நடிகனாகும் முன்.. - துபாய் வாழ்க்கை நினைவுகளை பகிர்ந்த விஜய் சேதுபதி
x
தினத்தந்தி 9 Jun 2024 5:59 PM IST (Updated: 9 Jun 2024 6:05 PM IST)
t-max-icont-min-icon

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி உள்ள 50-வது திரைப்படம் 'மகாராஜா'.

சென்னை,

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி உள்ள 50-வது திரைப்படம் 'மகாராஜா'. இந்த படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் புரொமோசன் பணியின்போது பேசிய விஜய் சேதுபதி நடிகனாகும் முன் துபாயில் இருந்த நினைவுகளை பகிர்ந்தார். அது குறித்து அவர் பேசியதாவது,

'இது நான் சொல்லி சொல்லி சலிச்சுப் போன கதையாக இருந்தாலும், கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். நான் ஒரு கம்பெனியில் 3,500 ரூபாய் சம்பளத்தில் அக்கவுண்டன்டாக வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போது துபாயில் வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் தருவார்கள் என்றும் என் நண்பர் ஒருவர் கூறினார்.

என்னிடம் அப்போது பாஸ்போர்ட் கிடையாது. பாஸ்போர்ட் அப்ளை பண்ணினேன். 10 நாட்களில் செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். இதனால், ஏரியா கவுன்சிலரை பார்க்க வேண்டும், காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். என்கிட்ட சுத்தமா காசு கிடையாது. அப்போது நானே என்னோட டிகிரி சான்றிதழ், ரேஷன் கார்டு, கான்டக்ட் சான்றிதழ் எடுத்துகொண்டு நேராக கமிஷனர் ஆபிஸ் போனேன்.

அங்க ஒரு நல்ல மனுஷன் இருந்தாரு. அவர்கிட்ட இவற்றையெல்லாம் காட்டி, "சார் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு போகிறேன், எனக்கு இந்த மாதிரி கேட்கிறார்கள், சீக்கிரம் வேண்டும் சார்" என்று கூறினேன். அங்க நிறைய பாஸ்போர்ட் அப்ளிகேஷன் வந்திருந்தது. நல்ல நேரம் அவர், அதுல என்னோட பாஸ்போர்ட் அப்ளிகேஷன் எடுத்துட்டு, அடுத்த நாள் எங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷன் போக சொன்னாரு.

போலீஸ் ஸ்டேஷன் போனப்போ அங்க எங்கிட்ட, உங்களுக்கு கமிஷனர் ஆபிசில் ஆள் தெரியுமா என்று கேட்டாங்க. எனக்கு யாரையும் தெரியாது. ஆனா எனக்காக அவர் கால் பண்ணி சொல்லிருக்காரு. பாஸ்போர்ட் கிடைத்தது. நான் வாங்கிட்டு ஊருக்கு போனேன். ஒரு கவர் கொடுத்தாங்க. ஒரு தாத்தா வந்து கூட்டிட்டு போவாருனு சொன்னாங்க. அவருக்கு 75 வயசு எனக்கு 21 வயசு.

அவர் வந்து என்னை கூட்டிட்டு போனாரு. வந்தா பாலைவனத்துல மழை பெய்யுது. நம்ம துபாய்ல பெரிய ஆளாக போறோம்னு நினைச்சு கனவுகளோட நான் போனேன். அப்புறம் என்னோட ஆபிசுக்கு சென்று முதலாளியை பார்த்தேன். நான் சம்பாதிச்ச பணம் குடும்ப சூழ்நிலைக்கு ஓரளவு வசதியா இருந்தது. ஆனால் நான் நினைத்த அளவுக்கு வாழ்க்கை மாறவில்லை.

20 வயசுல ஏதாவது சாதிக்க மாட்டோமா, குடும்பத்தை எப்படியாவது மேல கொண்டு வந்துவிட மாட்டோமா என்று ஒரு கனவு இருக்கும். எதையாவது பண்ண மாட்டாமோன்னு ஏங்கிருக்கேன். அங்க கொண்டாட்டம் எல்லாம் கிடையாது. வியாழக்கிழமை என்றால் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து பிரியாணி சமைத்து சாப்பிட்டுவிட்டு, துணி எல்லாம் துவைச்சு காயப்போடுவோம்.

ரூம் சுத்தம் செய்வது, சமைப்பது, பாத்ரூம் கழுவுவது இவ்வளவுதான் வாழ்க்கை. இதை தாண்டி கனவு காண கூட நேரம் இருக்காது. இப்போ 10 வருஷம் கழிச்சு திரும்பி அந்த இடத்தை பார்க்கும்போது, நான் அங்க ஏக்கத்தோட சுத்தின, அந்த ஞாபகங்கள்தான் எனக்கு வந்ததே தவிர, மற்ற எதுவும் எனக்கு தெரியவே இல்ல'. இவ்வாறு கூறினார்.


Next Story