‘சென்சார் வாரியம் மதிக்கப்பட வேண்டும்’ - சவுந்தர்யா ரஜினிகாந்த்

சென்சார் விதிகளை திரைப்படங்கள் பின்பற்ற வேண்டும் என்பது நீண்ட கால வழக்கம் என சவுந்தர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
சென்னை,
'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக 'வித் லவ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'அய்யோ காதலே' பாடல் வெளியாகி வைரலானது. இந்த படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வித் லவ்’ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது சென்சார் வாரியம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது;-
“எங்கள் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெற சென்சார் வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளோம். சென்சார் வாரியம் இருப்பதற்கு காரணம் உள்ளது. எந்த ரசிகர்களுக்கு எந்த படத்தை காட்ட வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான ஒரு அமைப்பே சென்சார் வாரியம்.
சென்சார் வாரியம் மதிக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். அது புதிதாக வந்த ஒரு அமைப்பு கிடையாது. இந்தியாவில் சினிமா படங்கள் சென்சார் வாரியத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது நீண்ட காலமாக தொடர்ந்து வரும் வழக்கமாகும். இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு பேச விரும்பவில்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






