கிறிஸ்டோபர் நோலனின் “தி ஒடிசி” டீசர்
கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ படம் அடுத்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது.
பிரபல ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'ஓப்பன் ஹெய்மர்'. ஓப்பன் ஹெய்மர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்பி நடித்த இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இதனையடுத்து, கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு 'தி ஒடிஸி' எனப்பெயரிடப்பட்டுள்ளது. மேட் டாமன், ஸ்பைடர் மேன்' பட நடிகர் டாம் ஹாலண்ட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில், இப்படத்தில், அன்னே ஹாத்வே, ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரோன் ஆகியோர் இணைந்தனர்.
இந்நிலையில், ‘தி ஒடிசி’ படத்தின் டீசர் நேற்று வெளியானது. ‘அவதார் பயர் அண்ட் ஏஷ்’ படத்தை வெளியிட்ட ஐமேக்ஸ் திரையரங்குகளில் ஒடிசி’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. கவிஞர் ஹோமரின் காவிய கவிதையை தழுவி உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது. ‘தி ஒடிசி’ திரைப்படம் ஐமேக்ஸ் கேமராக்களிலேயே எடுக்கப்பட்டதால் இதன் ஐமேக்ஸ் வெளியீட்டைக் காண பலரும் ஆர்வமாக உள்ளனர்.







