இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் 'படையப்பா' படம் கொண்டாடப்படும்- நடிகர் பிரபு

படையப்பா திரைப்படத்தை இன்று மட்டுமல்ல, இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் மக்களும், ரசிகர்களும் கொண்டாடுவார்கள் என்று பிரபு கூறினார்.
மதுரை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த படையப்பா படம் கடந்த 12ந் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ ரிலீசான இந்த படம் இதுவரை ரூ.14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, நடிகர் பிரபு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
படையப்பா திரைப்படத்தை இன்று மட்டுமல்ல, இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் மக்களும், ரசிகர்களும் அதை கொண்டாடுவார்கள். அந்த படத்தில் நடித்த சிவாஜி அய்யா, மணிவண்ணன், சவுந்தர்யா உள்ளிட்டோர் இப்போது இல்லை. அருமையான படம், அருமையான இசை, ஒளிப்பதிவு. குழந்தைகள் படம் பார்க்க வேண்டும் என்றால் தயவு செய்து இந்த படத்தை பார்க்கலாம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலில் யார் வேண்டுமானாலும் இறங்கலாம். இதில் எந்த தவறும் இல்லை. அவருக்கு என் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.






