எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை - இயக்குநர் ராஜமவுலி

‘வாரணாசி’ படத்தில் இடம்பெறும் இராமாயண எபிசோட் குறித்து இயக்குநர் ராஜமவுலி பேசியிருக்கிறார்.
ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘வாரணாசி’ என டைட்டில் அறிவிக்கபட்டது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.
'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா, ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், டீசர் வெளியீட்டு நிகழ்வில் எஸ். எஸ். ராஜமவுலி பேசியது சர்ச்சையையும் கவனத்தையும் பெற்றுள்ளது. படத்தின் பெயர் டீசரை அகண்ட திரையில் வெளியிட முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், குழப்பங்கள் எழுந்ததும் மேடையில் ஏறிய ராஜமவுலி , “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், என் அப்பா எப்போதும் நான் அனுமனால் ஆசிர்வதிக்கப்பட்டு வருவதாகக் கூறுவார். இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது எனக்கு கடுமையாக கோபம் வந்தது. இப்படித்தான் அனுமன் எனக்கு உதவுவானா? அனுமன் இந்த முறையாவது எனக்கு இதைச் சரிசெய்வானா?” என்றார்.
“‘மகாபாரதம்’ எனது கனவுப் படம். இந்த படத்திற்காக இராமாயண எபிசோடை எடுக்கும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருக்கிறேன்” என்று கூறிய ராஜமவுலி கடவுள் நம்பிக்கை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






