‘மூக்குத்து அம்மன் -2’ படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - ஆர்.ஜே.பாலாஜி

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆர்.ஜே.பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.
சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.
மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று, ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் முதல் பாடலான காட் மோட் (God Mode) பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ‘கருப்பு’ படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘கருப்பு’ படத்தின் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், ரிலீஸ் அமையும் பட்சத்தில் விரைவில் படம் ரிலீசாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும் திருச்செந்தூரில் சாமி தரிசனம் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் அமைந்ததாக குறிப்பிட்ட அவர், ‘கருப்பு’ திரைப்படத்திற்காகவும் சேர்த்து வேண்டிக்கொண்டதாக தெரிவித்தார். ‘மூக்குத்து அம்மன் -2’ குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார் என்றும், அந்த படத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்டதோடு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.






