பாக்யஸ்ரீயிடம் நிஜமாகவே அடி வாங்கினேன் - துல்கர் சல்மான்

கோப்புப்படம்
நல்ல கதைக்காக எதையும் செய்யலாம் என்று துல்கர் சல்மான் கூறியுள்ளார்.
ராணா தயாரித்து செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் ‘காந்தா' படம் கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் இன்று கொண்டாடினார்கள். இதில் கலந்துகொண்ட துல்கர் சல்மானிடம், ‘படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் உங்கள் கன்னத்தில் அறையும் காட்சியில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது? எத்தனை அடி வாங்கினீர்கள்?' என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், ‘‘உணர்வுபூர்வமான அந்த காட்சியில் வாங்கிய ஒவ்வொரு அடியும் நிஜமானது. எத்தனை ‘டேக்'குகள் போனோம் என்று தெரியாது. ஆனால் நல்ல கதைக்காக எதையும் செய்யலாம் என்பதால், ‘தயக்கம் வேண்டாம், நல்லா அடிங்க...', என்று நானே அவரிடம் கேட்டுக்கொண்டேன். எந்த காட்சியிலும் உண்மை தன்மை இருந்தால், அந்த காட்சி இன்னும் வலிமை பெறும். எனது படங்களில் நான் அதைத்தான் பின்பற்றுகிறேன். எனவே தான் பரபரப்பான அந்த காட்சியில் நிஜமாகவே நான் அடி வாங்கினேன்’’, என்றார்.
பாக்யஸ்ரீ போர்ஸ் பேசும்போது, ‘‘இந்த படத்தின் மூலம் தமிழிலும் களமிறங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.






