வைரலாகும் 'இந்தியன்2' இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்
'இந்தியன்2' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. படத்தின் இசை வெளியீட்டிற்கான அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், பின்னர் ஒரு சில காரணங்களால் தாமதமானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'இந்தியன் 2' திரைப்படம் வருகிற ஜூலை 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'இந்தியன்2' படத்தின் இசை வெளியீட்டு விழா மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அதன் அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியன் தாத்தாவின் சேனாபதி கத்தி வடிவத்தில் இந்த அழைப்பிதழை வடிவமைத்து இருக்கிறார்கள். படக்குழுவினர் அனைவருமே இன்று இசைவெளியீட்டு விழாவிற்கு வர இருக்கிறார்கள். இவர்களோடு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்தும், சிலம்பரசனும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
'இந்தியன்' படம் வெளியாகி 28 வருடங்கள் ஆகிறது. இதன் முதல் பாகம் வரும் ஜூன் 7 அன்று ரீ-ரிலீஸ் ஆகிறது. ஜூலை மாதம் இதன் இரண்டாம் பாகம் வெளியாகிறது.