படம் தயாரிப்பது எளிது, ரிலீஸ் செய்வதுதான் கடினம் - நடிகர் சரண்ராஜ்
படம் தயாரிப்பது எளிது, ரிலீஸ் செய்வதுதான் கடினம் என்று சரண்ராஜ் 'குப்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சரண்ராஜ், வில்லன், குணச்சித்திரம், கதாநாயகன் என்று பல்வேறு வேடங்களில் நடித்திருப்பதோடு, 'அண்ணன் தங்கச்சி', 'எதார்த பிரேம கதா' போன்ற படங்கள் மூலம் இயக்குநராகவும் கவனம் ஈர்த்தவர், தற்போது 'குப்பன்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
நடிகர் சரண்ராஜ் இயக்கியுள்ள படம், 'குப்பன்'. அவரின் இளைய மகன் தேவ் நாயகனாகவும் மற்றொரு நாயகனாக ஆதிராமும் அறிமுகமாகின்றனர். நாயகிகளாக சுஷ்மிதா, பிரியா அருணாச்சலம் நடித்துள்ளனர்.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் தேஜ் சரண், தயாரிப்பாளர் அஸ்வத் ஆகியோருடன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் சரண்ராஜ் பேசும் போது, "நான் வீட்டில் இருந்தால் மாலை நேரம் கடற்கரை வழியாகப்போவேன். தனியாக ஒரு இடத்தில் படகில் உட்கார்வேன். அங்கே குப்பன் என்ற நண்பர் பழக்கமானார். ஒரு நாள், '30 வருடங்களாக சினிமாவில் இருக்கிறீர்கள். மீனவர்கள் வாழ்க்கை பற்றி ஏன் படம் எடுப்பதில்லை' என்று வருத்தமாகச் சொன்னார். கடல் பற்றி, மீனவர்கள் கஷ்டப்படுவதைப் பற்றிச் சொன்னார். அதை யோசித்தேன். ஒரு லைன் கிடைத்தது. ஒரு மீன் பிடிக்கும் பையன். ஒரு ஜெயின் பெண். சைவம் - அசைவம், இதற்குள் என்ன நடக்கிறது என்பதை கதையாக்கினேன். அதுதான் இந்தப் படம்.
சின்ன வயதிலிருந்தே நடனம், பாட்டு என அனைத்தையும் கற்றார் தேவ். என் கலை வாரிசாக வருவார் என்று நினைத்தேன். ஆனால், என்பெரிய மகன் ஹீரோவாகி விட்டார். இன்று படம் தயாரிப்பது எளிதாகிவிட்டது. திரைக்கு கொண்டு வருவது மிகவும் கடினம். அதைவிட கடினம் தியேட்டருக்கு மக்கள் வருவது. இந்தப் படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.