'என் பேரு கரசாமி, என்னை...." - வைரலாகும் தனுஷ் படத்தின் டைட்டில் வீடியோ

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படத்துக்கு 'கர' என்று பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடிக்கும் 54-வது படத்தை 'போர் தொழில்' படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்துக்கு 'கர' என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் வீடியோவில் தனுஷ் பேசும், "பயிரோ, களையோ, பாவமோ, புண்ணியமோ அவன் அவன் விதைச்சத அவன் அவன்தான் அறுத்தாகணும். நான் விதைச்சத அறுவடை பண்ற நேரம் வந்துருச்சு. ஆனால் அதுக்கு முன்னாடி என் மேல படிஞ்ச கறையை துடைக்கணும். என்னை நம்பி இருக்கிறவங்கள கரை சேர்க்கணும். என் பேரு கரசாமி. என்னை 'கர'ன்னு கூப்பிடுவாங்க" என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
'கர' திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த டைட்டில் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






