“தற்கொலை அல்ல...கொலை" - மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலைதான் என்று சிபிஐ தனது அறிக்கையில் கூறி, வழக்கை முடித்து வைத்தது.
மும்பை,
சுஷாந்த் சிங்கை 'இருவர்' சேர்ந்து கொலை செய்திருப்பதாக அவரின் சகோதரி ஸ்வேதா சிங் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில், உளவியலாளர்கள் இருவர் இந்த கருத்தை தன்னிடம் தெரிவித்ததாகவும், மின்விசிறிக்கும் தரைக்கும் இருக்கும் தூரத்திற்கு ஒருவர் தற்கொலை செய்ய முடிவெடுத்தால், அதற்கு நாற்காலியை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அந்த அறையில் நாற்காலியே இல்லை எனவும் கூறியுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பந்த்ரா பகுதியிலுள்ள தமது வீட்டில் தூக்கில் தொங்கியபடி நடிகர் சுஷாந்தின் உடல் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகம் நாளுக்குநாள் வலுப்பெற தொடங்கியது.
சுஷாந்த் சிங்கை நடிகை ரியா சக்கரவர்த்திதான் தற்கொலைக்கு தூண்டினார் என சுஷாந்தின் தந்தை புகார் அளித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலைதான் என்றும், இதில் ரியா சக்ரவர்த்திக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் சிபிஐ தனது அறிக்கையில் கூறி, வழக்கை முடித்து வைத்தது.
சிபிஐ-யின் இந்த அறிக்கையை, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே. சிங் கண் துடைப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் எதிர்த்து போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்






