பராசக்தி இசை வெளியீட்டு விழா : சிவகார்த்திகேயனை பாராட்டிய இயக்குநர்கள்

இயக்குநர்கள் மணிரத்னம், தமிழரசன் பச்சமுத்து நடிகர் சிவகார்த்திகேயனைப் பாராட்டியுள்ளனர்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். வெற்றிமாறன், மிஷ்கின், மணிரத்னம், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். ஏராளமான ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பார்த்து கரகோஷம் எழுப்பினார்கள்.
இந்த நிலையில், நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் மணிரத்னம், “நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் கதைகளைத் தேர்வு செய்கிறார். நான் அவரின் படங்களைக் கவனித்து வருகிறேன். அதேபோல், நடிகர் ரவி மோகன் பல நட்சத்திரங்கள் இணையும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேசுகையில், “எனக்கு சிவகார்த்திகேயனை எட்டு வருடங்களாக தெரியும். அவர் தயாரித்த கனா படத்தில் நான் உதவி இயக்குநர். அவர் படம் நடித்தாலே அது ஹிட்தான். அதைவிடவும் அந்தப் படத்தில் நிச்சயமாக கதை இருக்கும். அதற்கு உதாரணம் கனாதான். முதலில் அவரிடம் அந்தப் படத்தின் கதையை சொன்னபோது நிறைய பில்ட் அப் செய்துவிட்டோம். படத்தின் இடைவேளை காட்சி அவரை மையப்படுத்திதான் இருந்தது. நிறைய சீன்களை சேர்த்திருந்தோம். ஆனால் அதை அவர் நிராகரித்துவிட்டார். எனக்கு இரண்டாவது பாதி சுத்தமாக பிடிக்கவில்லை. ஏன் என்றால் இதை நீ எனது படமாக மாற்றிவிட்டாய். இந்தப் படத்தில் சத்யராஜ்தான் ஹீரோ. ஐஸ்வர்யா ராஜேஷ்தான் ஹீரோயின் என சொன்னார். அதற்கு பிறகு எட்டு வெர்ஷன்கள் வேலை செய்தோம். அவரால்தான் அந்தப் படம் ஒரு இயக்குநரின் படமாக வந்தது" என்றார். மேலும் ரவி மோகன் பற்றி பேசுகையில், "ரவி மோகன் சார் நீங்கள் போல்டாக முன்வந்து இந்தப் படத்தில் நடித்தது சூப்பர். நீங்கள் மட்டும்தான் இன்னும் முதல் பட இயக்குநர்களிடம் கதை கேட்கிறீர்கள்” என்றார்.






