“முத்து” படக் காட்சியை பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினி

ஆங்கில புத்தாண்டையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
2025-ம் ஆண்டு விடைபெற்றது. 2026-ம் ஆண்டு இனிதே பிறந்துள்ளது. தமிழ்நாட்டில் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். பெரும்பாலான தெருக்களில் இளைஞர்கள் நட்சத்திர வடிவில் 2026-ம் ஆண்டு வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை கட்டி தொடங்க விட்டிருந்தனர். புத்தாண்டு பிறந்தவுடன் ‘கேக்' வெட்டி ஒருவருக்கு ஒருவர் வழங்கி மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.ஆங்கில புத்தாண்டையொட்டி அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி ரசிகர்கள் புத்தாண்டை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ல அவரின் வீட்டின் முன்பு குவிந்து ரஜினியின் வாழ்த்துக்காக காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இருகரம் கூப்பியும், கை அசைத்தும் புத்தாண்டு வாழ்த்து கூறினார். பின்னர் தனது ரசிகர்களுக்கு பறக்கும் முத்தங்களை ரஜினிகாந்த் பறக்கவிட்டார். அப்போது ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். இதுதொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினி புத்தாண்டு வாழ்த்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “நான் எப்பவுமே போற ரூட்டை பத்தி கவலை பட்டதே கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு வண்டி எந்த ரூட்ல போகுதோ.. அந்த ரூட்ல, 'சிவா'-ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்..!” என்ற “முத்து” படக் காட்சியை பதிவிட்டுள்ளார்.






