ராஜமவுலிக்கு எதிரான விமர்சனங்களை கடுமையாக சாடிய ராம் கோபால் வர்மா

ராஜமவுலிக்கு எதிராக பரப்பப்படும் விமர்சனங்களை ராம் கோபால் வர்மா கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை,
ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘வாரணாசி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த வெளியீட்டு நிகழ்வில் எஸ். எஸ். ராஜமவுலி பேசியது சர்ச்சையையும் கவனத்தையும் பெற்றது. படத்தின் பெயர் டீசரை அகண்ட திரையில் வெளியிட முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், குழப்பங்கள் எழுந்ததும் மேடையில் ஏறிய ராஜமவுலி , “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், என் அப்பா எப்போதும் நான் அனுமனால் ஆசிர்வதிக்கப்பட்டு வருவதாகக் கூறுவார். இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது எனக்கு கடுமையாக கோபம் வந்தது. இப்படித்தான் அனுமன் எனக்கு உதவுவானா? அனுமன் இந்த முறையாவது எனக்கு இதைச் சரிசெய்வானா?” என்றார்.
கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர், தன் படத்துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பிட்டு புராணக் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தியது ஏன்? என ராஜமவுலிக்கு எதிராக விமர்சனக்கள் எழுந்தன. இந்நிலையில், ராஜமவுலிக்கு எதிராக பரப்பப்படும் விமர்சனங்களை ராம் கோபால் வர்மா கடுமையாக சாடியுள்ளார்.
கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது குற்றமல்ல என்றும், ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்க இயக்குனர் கேங்ஸ்டராக மாற வேண்டுமா, திகில் படம் எடுக்க பேயாக மாற வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.






