அனைவரும் பார்க்க வேண்டிய படம் “சிறை” - நடிகை குஷ்பு

நடிகர் விக்ரம் பிரபு கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு, மிக சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளதாக நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை.
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ‘சிறை’ படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இயக்குநர் தமிழ், தான் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘சிறை’ என்ற பெயரில் எழுதிய கதையே திரைப்படமாக திரையரங்குகளில் வெளியானது. இப்படம் சிறைக் கைதியின் காதல் கதையாகவும் இஸ்லாமியர்கள் மீதான குற்றப்பார்வை குறித்தும் அழுத்தமாக பேசியது. சாதாரண காதல் கதையைக் கிளைமேக்ஸில் பரபரப்பாகச் சொல்லி ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்து சென்று வெற்றியும் பெற்றனர்.
இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுடன் அறிமுகமாகும் எல்.கே.அக்ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனந்தா நாயகியாக நடித்திருக்கிறார்.‘சிறை’ திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது. ‘சிறை’ படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது. இப்படம் திரையில் 25 நாட்களை கடந்து வெற்றி பெற்றுள்ளது. இப்படம் கடந்த 23ந் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி, அங்கும் தன் முத்திரையைப் பதித்து வருகிறது. ‘சிறை’ படம் உலகளவில் ரூ. 32 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில், நடிகை குஷ்பு ‘சிறை’ படத்தை பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சமீபகாலமாகப் பலராலும் பேசப்பட்டு, அமைதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள சிறை திரைப்படத்தை ஒருவழியாகப் பார்த்துவிட்டேன். இது அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். ஒரு சாதாரண கதையை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். அனைவருமே அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக விக்ரம் பிரபுவைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்.அந்த கதாபாத்திரத்தைப் புரிந்து கொண்டு, மிகக் கட்டுக்கோப்பான நடிப்பை நீ வழங்கியிருப்பது, ‘புலிக்குப் பிறந்தது பூனையாகாது’ என்பதை நிரூபிக்கிறது. உன்னைப் பார்த்து மிகவும் பெருமையாக இருக்கிறது.
சரியான நடிகர்களைத் தேர்வு செய்ததற்காக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி பாராட்டுக்குரியவர். உண்மையில் படத்தில் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது. ஒரு தேவையில்லாத காட்சியோ, வேண்டாத பாடல்களோ எதுவுமே இல்லை. இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.






