''அவர் இல்லாததால் நிறைய கொடுமைகள் நடக்கின்றன'' - சிவகார்த்திகேயன்

தான் பாடல்கள் எழுதி அதில் பெற்ற சம்பளத்தை நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்கு கொடுத்ததாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார்
சென்னை,
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் நினைவைப் போற்றும் விதமாக சென்னையில் 'ஆனந்த யாழை ' என்கிற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது, தான் பாடல்கள் எழுதி அதில் பெற்ற சம்பளத்தை பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்கு கொடுத்ததாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்
அவர் கூறுகையில், " முதல்முறையாக நெல்சன் என்னை அழைத்து பாட்டு எழுத சொன்னபோது சும்மா ஜாலியாக எழுதினேன். அதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் அந்த வேலையை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு சம்பளாக ஏதாவது கொடுங்கள், அதை நா. முத்துக்குமார் சாருக்கு கொடுக்கனும் என்று கேட்டேன். இது உதவி இல்லை என்னுடைய கடமை.
உங்களை போல பாடல் எழுதுவதற்கு இன்னொருவர் பிறக்க முடியுமா என்று தெரியவில்லை. நீங்கள் இல்லாததால் நிறைய கொடுமைகள் நடக்கின்றன. நான் எல்லாம் பாடல் எழுதுகிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் பாடல் எழுதுவதற்கு முன்னாடியும் உங்களுடைய 2 பாடல்களையாவது கேட்டுவிட்டுதான் எழுதுவேன்'' என்றார்.






