நள்ளிரவில் தடுத்து நிறுத்தப்பட்ட "சூர்யா 45" படப்பிடிப்பு


நள்ளிரவில் தடுத்து நிறுத்தப்பட்ட சூர்யா 45  படப்பிடிப்பு
x

நடிகர் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் உள்ள வெளிச்சை கிராமத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முறையான அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக படப்பிடிப்பு கிரேன்கள் மற்றும் வாகனங்கள் சாலையில் நிரம்பியிருந்ததால் அப்பகுதி மக்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால் தற்காலிகமாக 'சூர்யா 45' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை தரப்பில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதியை தாம்பரம் காவல் ஆணையர் அலுவகத்தில் பெற்று, அதன் பின்னர் படப்பிடிப்பை நடத்த அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் படப்பிடிப்பு பணிகளை முடித்து, இந்த ஆண்டில் இறுதியில் 'சூர்யா 45' படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 'ரெட்ரோ' ரிலீஸுக்கு பின் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story