"ரவிக்காக மட்டும்தான் இந்த படம் ஓடும்"- 'பராசக்தி' பார்த்தபின் கெனிஷா பேட்டி

அவர் ஹீரோவாக நடித்தால் என்ன, வில்லனாக நடித்தால் என்ன… இந்த படத்தில் நம்பர் 1 அவர்தான் என்று கூறியுள்ளார்.
சென்னை,
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் ரவிமோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி திணிப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தபடத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று வெளியான பராசக்தி படத்தை காண பாடகி கெனிஷா நடிகர் ரவிமோகனுடன் சென்னை வடபழனியில் உள்ள காசி தியேட்டருக்கு சென்றுள்ளார்.
‘பராசக்தி’ திரைப்படத்தை பார்த்து திரையரங்கில் இருந்து வெளியே வந்த நடிகர் ரவி மோகனின் தோழி கெனிஷா, செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “ரவிக்காக மட்டும்தான் பராசக்தி ஓடும். என் கண்ணுக்கு வேறு யாருமே தெரியவில்லை. அவருக்காகவே இந்த படம் எடுக்கப்பட்டதுபோல் இருக்கிறது. அவர் ஹீரோவாக நடித்தால் என்ன, வில்லனாக நடித்தால் என்ன… இந்த படத்தில் நம்பர் 1 அவர் தான். இரண்டாம் பாதியில் அவரைத் தவிர படமே இல்லை. ரவி எப்போதுமே எவர்கிரீன், எப்போதுமே எவர் பெஸ்ட்,” என்றார்.
மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து பேசிய கெனிஷா, “விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் எப்போது வெளியாகிறதோ, அன்றுதான் உண்மையான பொங்கல்,” என்று தெரிவித்துள்ளார். கெனிஷாவின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.






