மைதிலி தாகூர் பாடிய 'விஸ்வாசம்' பட பாடல் வைரல்

இசையமைப்பாளர் டி.இமான் மைதிலி தாகூரை பாராட்டியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவில் சேர்ந்து, தர்பங்கா மாவட்டத்தின் அலிநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மைதிலி தாகூர். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் பினோத் மிஸ்ராவை 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு தனது இரண்டு சகோதரர்களுடன் சேர்ந்து பாடல்கள் பாடி அதனை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2019ம் ஆண்டு வெளியான 'விஸ்வாசம்' படத்தில் இடம் பெற்றிருந்த "கண்ணான கண்ணே" பாடலை பாடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், விஸ்வாசம் பட இசையமைப்பாளர் டி.இமான், மைதிலி தாகூர் பாடிய வீடியோ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சில பாடல்கள் காலத்தால் அழியாத கிளாசிக் பாடல்களாக மாறுகின்றன! சமூக ஊடகங்களின் சக்தியால் இன்று பல்வேறு காரணங்களுக்காக அது மீண்டும் வைரலாகப் பரவி வருவதில் மகிழ்ச்சி! நிபந்தனையற்ற அன்புடன் அதைப் பகிர்ந்து கொண்ட கடவுளுக்கும், அனைத்து அன்பர்களுக்கும் மகிமை! என்று குறிப்பிட்டுள்ளார்.






