"பி.பி. 180" திரைப்பட விமர்சனம்

இயக்குனர் ஜே.பி இயக்கிய "பி.பி. 180" திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
"பி.பி. 180" திரைப்பட விமர்சனம்
Published on

எம்.எல்.ஏ.வான பாக்யராஜின் மகள் ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட அவரது உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று பாக்யராஜ் உறுதியாக இருக்கிறார். இதையடுத்து ரவுடியான டேனியல் பாலாஜி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தான்யா ரவிச்சந்திரனை, பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்.

இதற்கு தான்யா ரவிச்சந்திரன் மறுக்க, இருவரிடையே பகை ஏற்படுகிறது. மோதலும் உண்டாகிறது. தான்யா ரவிச்சந்திரனையும், அவருக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் கமிஷனர் தமிழையும் பழிவாங்க டேனியல் பாலாஜி மிகப்பெரிய சம்பவங்களை அரங்கேற்றுகிறார். இதை தான்யா ரவிச்சந்திரன் சமாளித்தாரா? இறுதியில் என்ன ஆனது? என்பதே பரபரப்பான மீதி கதை.

நோயாளிகளிடம் பரிவு, பணியில் நேர்மை என பொறுப்பான அரசு ஆஸ்பத்திரி டாக்டராக மிளிர்கிறார் தான்யா ரவிச்சந்திரன். பொறுமை இழக்கும் நேரத்தில் சிங்கமாகவும் கர்ஜிக்கிறார். டேனியல் பாலாஜியின் வில்லத்தனமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. இப்படிப்பட்ட நடிகரை இழந்து விட்டோமே... என்பதில் சோகம் தான்.

பாக்யராஜின் அனுபவ நடிப்பு பேசப்படுகிறது. தமிழ், அருள்தாஸ், நயனா, ஸ்வேதா டோரத்தி, ஜாக் அருணாசலம், ரங்கா என அனைவருமே திறம்பட நடித்துள்ளனர். ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்துக்கு துணை நின்றுள்ளன.

பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். சில காட்சிகளில் நம்பிக்கை வரவில்லை. சாதாரண ரவுடி போலீஸ் கமிஷனரை மிரட்டுவதை ஏற்க முடியுமா? லாஜிக் மீறல் காட்சிகளால் திரைக்கதையின் போக்கு மாறிவிட்டது.

எதார்த்த நிகழ்வுகளின் தொகுப்பாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் காட்சிகளை அடுக்கி காண்போரை திடுக்கிட வைத்துள்ளார், இயக்குனர் ஜே.பி. கிளைமேக்ஸ்' திகில் ரகம்.

பி.பி. 180 - ஓவர் ஆட்டம் கூடாது.

X

Daily Thanthi
www.dailythanthi.com