"மதராஸ் மாபியா கம்பெனி" சினிமா விமர்சனம்

ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் ஆனந்தராஜ் நடித்துள்ள "மதராஸ் மாபியா கம்பெனி" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
"மதராஸ் மாபியா கம்பெனி" சினிமா விமர்சனம்
Published on

சென்னை,

சென்னையின் மிகப்பெரிய டான்' ஆக வலம் வரும் ஆனந்தராஜ், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ரவுடியை ஏஜெண்டாக வைத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதேவேளை தன் மீது ஒரு வழக்குப்பதிவும் இல்லாதபடி பார்த்துக் கொள்கிறார்.

இதற்கிடையில் ஆனந்தராஜின் சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவுகட்ட, உதவி கமிஷனர் சம்யுக்தாவைக் களத்தில் இறக்குகிறது காவல்துறை. சம்யுக்தாவும், ஆனந்தராஜூக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டி அவரை கைது செய்ய நெருங்குகிறார்.

அதேவேளை தொழில் போட்டி காரணமாக ஆனந்தராஜை கொலை செய்யவும் சிலர் திட்டமிடுகிறார்கள். இப்படி இரு தரப்பினரிடமும் சிக்கிக் கொள்ளும் ஆனந்தராஜ் என்ன ஆனார்? அவரது மாபியா தொழில் என்ன ஆனது? என்பதே மீதி கதை.

நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார், ஆனந்தராஜ். அவரது நக்கல் பேச்சு ரசிக்க வைக்கிறது. காக்கிச் சீருடையிலும் ரசிக்க வைக்கிறார், சம்யுக்தா. டப்பிங்' மட்டும் அவருக்கு செட் ஆகவில்லை.

தீபா, முனீஷ்காந்த் காமெடி ரசிக்க வைக்கிறது. ராம்ஸ், சசிலயா, ஆராத்யா, ஷகிலா ஆகியோரும் கொடுத்த வேலையைக் குறைவின்றி செய்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் தேவாவின் இசை ஆட்டம் போட வைத்துள்ளது. அசோக்ராஜின் ஒளிப்பதிவும் படத்தை தாங்கி பிடித்துள்ளது.

நகைச்சுவை காட்சிகள் பலம். காட்சிகளை யூகிக்க முடிவது பலவீனம். இரண்டாம் பாதியில் கருத்து சொல்கிறோம் என்ற பெயரில் திரைக்கதையின் போக்கை மாற்றிவிட்டார்கள். ஆனந்தராஜின் மாறுவேடத்தை யாருமே கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா?

ஒரு ரவுடியின் இறுதிகட்ட வாழ்க்கையை ஒரு பாடமாக சொல்லியதுடன், நகைச்சுவையையும், சமூக கருத்தையும் ஒருசேர கொடுத்து ரசிகர்களுக்கு கூட்டாஞ்சோறு' விருந்து வைத்துள்ளார், இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன்.

மதராஸ் மாபியா கம்பெனி - ஓவர் ஆட்டம் கூடாது.

X

Daily Thanthi
www.dailythanthi.com