“மகாசேனா” - சினிமா விமர்சனம்

தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், சிருஷ்டி நடிப்பில் வெளியான ‘மகாசேனா’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
மலைவாழ் மக்களின் ஊர் தலைவனாக இருக்கும் விமல், ஒரு யானையை வளர்த்து வருகிறார். அந்த ஊரில் இருக்கும் யாழி சிலையை அபகரிக்க மலை அடிவாரத்தில் இருக்கும் இன்னொரு கிராம மக்கள் திட்டம் தீட்டி வருகிறார்கள்.இந்த சதி திட்டத்திற்கு வனத்துறை அதிகாரி ஜான் விஜய்யும் துணை போகிறார். இதற்கிடையில் ஊர் திருவிழாவுக்கு தேதி குறிக்கப்படுகிறது. இந்த சூழலில் மதம் பிடிக்கும் யானை விமலின் மகளை தாக்கி விட்டு காட்டுக்குள் ஓடி விடுகிறது. யானையைத் தேடி காட்டுக்குள் செல்கிறார் விமல். யானையை விமல் கண்டுபிடித்தாரா? சிலையைக் கொள்ளையடிக்க துடிப்போரின் சதி திட்டத்தை முறியடித்தாரா? என்பதே மீதி கதை.
ஏதோ சிறப்பு தோற்றத்தில் நடிப்பது போல சில காட்சிகள் வந்து சென்று இருக்கிறார், விமல். நடிப்பு கை கொடுத்தாலும், பழங்குடியின தோற்றம் அவருக்கு ‘செட்' ஆகவில்லை.
சிருஷ்டி டாங்கேவின் நடிப்பும், தோற்றமும் ஆறுதல் அளிக்கிறது. வீரமான காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம். வில்லியாக வரும் மகிமா பெரியளவில் பயமுறுத்தவில்லை. ஜான் விஜய் தனது நடிப்பின் பாணியை மாற்றிக் கொண்டால் நல்லது. யோகிபாபுவின் நகைச்சுவை படத்துக்கு தேவையற்ற ஆணி. விஜய் சேயோன், கபீர் துகான்சிங் நடிப்பில் ஓவர் பில்டப். சுபாங்கி, இலக்கியா நடிப்புக்கு ஓகே சொல்லலாம்.

மனாஸ் பாபுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் உயிரோட்டமாக இருக்கிறது. பிரவீன் குமார் இசை சுமார் ரகம். நடிகர்-நடிகைகளின் எதார்த்தமான நடிப்பு பலம் என்றாலும் திரைக்கதையில் நிறைய தடுமாறி இருக்கிறார்கள். நிறைய காட்சிகள் ஏற்கனவே பார்த்தது போல இருக்கிறது. புதுமையும், விறுவிறுப்பும் இல்லை. படத்தில் காட்டப்பட்ட யானையும் சுறுசுறுப்பாக இல்லை. சாப்பாடு போட்டார்களா, இல்லையா?
ஒரு சாதாரண கிராமத்து கதையில், பல கிளைக் கதைகளை முடிச்சு போட்டு ரசிக்க வைக்க பார்த்திருக்கிறார் இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன்.
மகாசேனா - மை இல்லா பேனா.






