பகல் கனவு - சினிமா விமர்சனம்


பகல் கனவு - சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 17 Nov 2025 5:55 PM IST (Updated: 17 Nov 2025 5:58 PM IST)
t-max-icont-min-icon

பைசல்ராஜ் இயக்கத்தில் ஷகிலா, கூல் சுரேஷ் நடித்துள்ள ‘பகல் கனவு’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

யூ-டியூப் சேனல் நடத்தி வரும் பைசல்ராஜ், தனது சேனல் பிரபலமாக திட்டம் போடுகிறார். ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள ஒரு வீட்டை தேர்வு செய்து, அங்கு தனது காதலி ஆதிராவை கூட்டிச்சென்று அவரை பேயாக நடிக்கச் செய்கிறார். இந்த வீடியோ வைரலாக, வீட்டின் உரிமையாளர் பைசல்ராஜின் போலித்தனத்தை அம்பலப்படுத்துகிறார். இந்த பேய் வீடியோ விவகாரம், ஆதிராவின் குடும்பத்துக்கு தெரியவர பிரச்சினை வெடிக்கிறது. ஆதிராவை வெளிநாட்டுக்கு அனுப்பவும் ஏற்பாடு நடக்கிறது.

இதற்கிடையில் உண்மையிலேயே பேய் இருக்கும் இடத்துக்கு போக துடிக்கும் பைசல் ராஜ், அதுதொடர்பாக ஊரை சுற்றிக்காட்டும் கைடு கூல் சுரேசை அணுகுகிறார். கூல் சுரேசும் பேய் இருக்கும் இடத்துக்கு கூட்டிச்செல்வதாக சொல்கிறார். அதன்பிறகு என்ன ஆனது? பேய் இருக்கும் இடத்துக்கு அவர்கள் சென்றார்களா? பேயை பார்த்தார்களா? என்பதே பரபரப்பான மீதி கதை.

பயமும், பதற்றமுமாக எதார்த்தமான நடிப்பால் படம் முழுக்க கவனம் ஈர்க்கிறார், பைசல் ராஜ். அவருக்கு இணையாக நடிப்பில் ரசிக்க வைக்கிறார் ஆதிரா. பேயாட்டம் ஆடும் இடங்களில் பயமுறுத்துகிறார். கிரிஷ்நந்து, ஷகிலா, கூல்சுரேஷ், கராத்தே ராஜா, விமல்ராஜ் என அனைவருமே நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஜாய் ஆண்டனியின் ஒளிப்பதிவு படத்தை தாங்கி பிடித்துள்ளது. சுரேஷ் நந்தனின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. பாடல்களும் ஓகே ரகம். பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். யூகிக்க முடியும் காட்சிகள் பலவீனம்.

யூ-டியூபர்களின் வாழ்க்கை ஓட்டத்தை, ரசிக்கும்படியான காட்சிகளை கொண்டு அடுக்கி, பொழுதுபோக்கு களமான திரைக்கதையில் படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், பைசல்ராஜ்.

பகல் கனவு - பலிக்கட்டும்

1 More update

Next Story