“தலைவர் தம்பி தலைமையில்” - சினிமா விமர்சனம்


“தலைவர் தம்பி தலைமையில்” - சினிமா விமர்சனம்
x

நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

ஊர் பஞ்சாயத்துத் தலைவரான ஜீவா, அந்த ஊரில் எந்த பிரச்சினை என்றாலும் முன்னுக்கு ஓடி வந்து தீர்த்து வைக்கிறார். இதனால் ஊரில் முக்கியப் புள்ளியாகவும் வலம் வருகிறார். இதற்கிடையில் தேர்தல் நெருங்கும் வேளையில், ஊர் பெரியவரான இளவரசுவின் மகள் பிரார்த்தனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. தேர்தல் சமயத்தில் அந்த திருமணத்தை நல்ல முறையில் நடத்தி முடித்தால் வாக்குகள் தனது கட்சிக்கு கிடைக்கும் என்பதால் திருமண ஏற்பாடுகளை முன்னின்று நடத்துகிறார் ஜீவா. அதேசமயம் இளவரசுவின் வீட்டுக்கு அருகே வசிக்கும் அவரது பகையாளியான தம்பி ராமைய்யாவின் தந்தை உயிரிழக்கிறார். துக்க சம்பவத்தால் திருமண ஏற்பாடுகள் கெட்டுவிடக்கூடாது என்று நினைக்கும் ஜீவா, துக்க வீட்டுக்கு ஓடிப்போய் அங்கே இறுதி சடங்குகளை கவனிக்கிறார். திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில்தான் அப்பாவின் உடலை எடுக்கவேண்டும் என்று தம்பி ராமைய்யா உறுதியாக உள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு அரங்கேறுகிறது. அடுத்து என்ன ஆனது? ஜீவா எப்படி சமாளித்தார்? என்பதே பரபரப்பான மீதி கதை.

அரசியல்வாதியாகவும், ஊர்த்தலைவராகவும் ஜீவா கலகலப்பாக நடித்துள்ளார். அதேவேளை எமோஷனல் காட்சிகளிலும் அசத்துகிறார். ஒரு பக்கம் திருமணம், இன்னொரு புறம் துக்க நிகழ்வு என இரண்டையும் சமாளிக்கும் இடங்களிலும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்கிறார்.

கல்யாண வீட்டில் அலப்பறை செய்யும் மணமகளாக பிரார்த்தனா, ஒருகட்டத்தில் மனமுடைந்து அழும் காட்சியில் 'ஸ்கோர்' செய்கிறார். நல்ல எதிர்காலம் உண்டு.

ஜென்சன் திவாகர் சைலண்ட் வில்லனாக மிரட்டுவதுடன், மாப்பிள்ளையை நேரில் பார்த்து பேசும் காட்சியில் அட்டகாசம் செய்கிறார். இளவரசு, தம்பி ராமைய்யாவின் அனுபவ நடிப்பு பெரும் பலமாக அமைந்துள்ளது. இதர கதாபாத்திரங்களில் நடித்திருப்போர் அனைவருமே சிறப்பு.




பப்லு அஜூவின் ஒளிப்பதிவும், விஷ்ணு விஜய்யின் இசையும் படத்துடன் ஒன்ற செய்கிறது. பின்னணி இசையும் சிறப்பு. கலாட்டா காட்சிகள் படத்துக்கு பலம். சில காட்சிகளை யூகிக்க முடிகிறது.

கலகலப்பான கதைக்களத்தில், அரசியல் சார்ந்த விஷயங்களையும் புகுத்தி ஜாலியான படமாக கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் நிதிஷ். ஜீவாவுக்கு மீண்டும் ஒரு 'கம்பேக்' படம்.

1 More update

Next Story