தேவதானப்பட்டி அருகேஇறைச்சி வியாபாரியை கொலை செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும்:கலெக்டரிடம் உறவினர்கள் வலியுறுத்தல்


தேவதானப்பட்டி அருகேஇறைச்சி வியாபாரியை கொலை செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும்:கலெக்டரிடம் உறவினர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 11:32 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே இறைச்சி வியாபாரியை கொலை செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் உறவினர்கள் வலியுறுத்தினர்.

தேனி

வியாபாரி கொலை

தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 26). இறைச்சி விற்பனை கடை நடத்தி வந்தார். இவருடைய நண்பர் வினோத்குமார் (32). இவருக்கு ஒட்டணைக்கு அருகில் தென்னந்தோப்பு உள்ளது.

கடந்த 3-ந்தேதி வினோத்குமார், ஜெகதீஸ்வரன் இருவரும் அந்த தென்னந்தோப்புக்கு சென்றனர். அப்போது அணைக்கு அருகில் ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த ரிஷாத்ராஜ் (25) மற்றும் சிலர் மது அருந்தி கொண்டு இருந்தனர். அவர்கள் வினோத்குமாரை மது அருந்த அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ரிஷாத்ராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

சிறிது நேரம் கழித்து ரிஷாத்ராஜ் மற்றும் சிலர் அங்கு வந்து வினோத்குமார், ஜெகதீஸ்வரன் இருவரையும் அரிவாளால் வெட்டினர். இதில் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார். வினோத்குமார் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து வினோத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெகதீஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சாலை மறியல்

இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிஷாத்ராஜின் தந்தை செல்வம் உள்பட 3 பேரை கைது செய்தனர். ரிஷாத்ராஜ் மற்றும் சிலரை தேடி வருகின்றனர். இந்நிலையில், கொலை செய்த ரிஷாத்ராஜ் உள்பட அனைவரையும் கைது செய்யக்கோரி ஜெகதீஸ்வரனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று முன்தினம் கெங்குவார்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கை விட்டனர்.

நேற்று ஜெகதீஸ்வரன் மற்றும் வினோத்குமாரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உறவினர்கள் சிலர் மட்டும் கலெக்டர் முரளிதரனை சந்தித்து பேசினர்.

கலெக்டரிடம் வலியுறுத்தல்

அப்போது அவர்கள், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ரிஷாத்ராஜ் உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று வலியுறுத்தினர். அவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருவதாகவும், உறுதியாக அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு ஜெகதீஸ்வரனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Related Tags :
Next Story