கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று ஆடி அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பால், எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இறுதியாக மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
இதேபோல் நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன், நாமக்கல் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வராகி அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் நேற்று ஆடி அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
வெற்றிலை அலங்காரம்
எருமப்பட்டி அருகே உள்ள ஒசக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி சாமிக்கு வெற்றிலை மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் கத்தி போடும் நிகழ்ச்சியும், சக்தி அழைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று. இதையடுத்து கோவிலை சுற்றி கொண்டுவரப்பட்டு பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
108 பால்குட அபிஷேகம்
பரமத்திவேலூர் கொங்கலம்மன் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி 13-ம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை பக்தர்கள் கோவிலில் இருந்து பால்குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். பின்னர் பால் குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்து அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேலூர் கொங்கலம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதேபோல் நாமகிரிப்பேட்டை பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், வீரபத்திர சுவாமி கோவில், முருகன் கோவில், ஒடுவன் குறிச்சி காளியம்மன் கோவில், மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களில் ஆடி அமாவாசையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.