திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருஷாபிஷேக பூஜை நாளை தொடங்குகிறது

ஜூலை 2-ந் தேதி சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை கணக்கில் கொண்டு ஆனிமாத உத்திரம் நட்சத்திர நாளில் வருஷாபிஷேகம் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு ஜூலை 2-ந் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
வருஷாபிஷேக பூஜைகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. நாளை மாலை 6.30 மணிக்கு ஆச்சார்ய வர்ணம், பிரசாத சுத்தி பூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்து கலசாபிஷேகம், அத்தாழ பூஜை நடக்கிறது. வருகிற 1-ந் தேதி கணபதி ஹோமம், சுகிர்த ஹோமம், உச்ச பூஜை உதயமார்த்தாண்ட மண்டபத்தில் மண்டப சுத்தி, அத்தாழ ஸ்ரீ பலி போன்றவை நடைபெறும்.
2-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பைத்தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் நடைபெறும். அதனைத்தொடர்ந்து சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம், உதய மார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. பின்னர் ஆதிகேசவபெருமாள் மற்றும் பூதேவி ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனிதநீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சாமி, அய்யப்ப சாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் சிறப்பு அன்னதானம் நடக்கிறது. மாலையில் அலங்கார தீபாராதனையைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் லட்சதீப விழா நடக்கிறது.






