மனித வாழ்க்கையின் ஒளியாக தோன்றிய அய்யா வைகுண்டர்

தாய்-தந்தையர் சொல்லைக் கேட்டு நடப்பதால் மோட்சம் கிடைக்கும் என்பதை அகிலத்திரட்டு அம்மானை மூலம் அய்யா வைகுண்டர் உணர்த்துகிறார்.
தன் மீது அன்பு கொண்டு தர்மத்தின் வழி நடக்கின்ற பக்தர்களை பாதுகாப்பது தான் இறை அவதாரத்தின் முக்கிய நோக்கம் ஆகும். தர்மத்தின்படி வாழ்கின்ற அன்பான மக்களை பாதுகாக்க வேண்டி அவதரிக்கும் இறைவன், நல்மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் தீயவர்களை அழிக்கின்றார். தன் மீது அன்பு கொண்ட சான்றோர் மக்களை காத்து, கலி என்னும் அரக்கனை அழிப்பதற்காக கலியுகத்தில் திருமால் எடுத்த அவதாரமே ‘அய்யா வைகுண்டர்’ அவதாரம் ஆகும். பூலோக தாய் தந்தையருக்கு மகனாக பிறக்காமல் ஸ்ரீமன் நாராயணர் தனக்கு தானே மகனாய் திருச்செந்தூர் திருப்பாற்கடலில் அவதரித்தார். திருமாலின் வைகுண்ட அவதார சரிதையைப் பற்றி அய்யா அருளிய ‘அகிலத்திரட்டு அம்மானை’ என்னும் புனித நூல் எடுத்துரைக்கிறது.
இறைவன் தனது அவதாரத்தின் போது வாழ்ந்து காட்டுவதன் வாயிலாகவும், புனித நூல்களின் வாயிலாக வழியை காட்டுவதன் மூலமாகவும் நாம் நல்வழியில் வாழ்வதற்கான உபதேசங்களை தருகின்றார். இறைவனின் கலியுக அவதாரத்தைப் பற்றி சொல்லும் அகிலத்திரட்டு அம்மானை என்னும் நூல் ஒவ்வொருவரும் எப்படி வாழ்ந்தால் பொல்லாத கலியை வெல்ல முடியும் என்பதற்கான வழியை காட்டுகின்றது. மேலும், இந்த கலியுகத்தில் அன்றாடம் என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் என்பதையும் அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு அம்மானை நூலின் மூலமாக எடுத்துரைத்துள்ளார்.
பெற்றோரிடம் பிள்ளைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி அய்யா சொல்லியுள்ளார். பெற்றோரை மதித்து, உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் சொல்படி நடப்பதால் பெரிய நன்மை கிடைக்கும் என்கிறார். ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கக்கூடிய உச்சபட்ச நன்மை என்பது மோட்சம் ஆகும். அந்த மோட்சம் தாய்-தந்தையர் சொல்லைக் கேட்டு நடப்பதால் கிடைக்கும் என்பதை அகிலத்திரட்டு அம்மானை மூலம் அய்யா வைகுண்டர் நமக்கு உணர்த்துகிறார்.
உலகில் அவ்வப்போது தோன்றும் ஞானிகளின் தீர்க்க தரிசனங்கள் என்பது பெரும்பாலும் உலகம் சார்ந்த அழிவுகள் பற்றியதாகவே இருக்கின்றது. ஆனால் அய்யா வைகுண்டரின் முன்னறிவிப்பானது, தனி மனிதனின் வாழ்க்கையில் தொடங்கி சமுதாயம், அரசியல், அறிவியல், ஆன்மிகம், இயற்கை என இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நிகழ்வுகளை பற்றியதாக இருக்கின்றது. அவற்றில் சிலவற்றைக் காண்போம்...
‘ஊசி முனையதிலே கடலும் மலையுடனே ஊரும் பதியுங் கண்டேன் சிவனே’ என்ற வாக்கின் மூலமாக அய்யா வைகுண்டர், அறிவியலை நமக்குள் கடத்துகிறார். ‘ஊசி முனையில் கடலையும், மலையையும், ஊரையும், பதியையும் காணலாம்’ என்பது இந்த வாசகத்தின் விளக்கம் ஆகும். அதாவது ஒரே இடத்தில் இருந்து கொண்டு உலகையும், உலகில் நடப்பவற்றையும் காண்கின்ற வகையில் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு. அவர் சொன்னபடியே இன்று உலகில் எந்த இடத்தில் ஒரு நிகழ்வு நடந்தாலும், அதனை உடனடியாக நமது வீட்டில் இருந்தபடியே கைபேசி, கணினி, தொலைக்காட்சி வாயிலாக அறியும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம்.
‘பொய்ச் சேத்திரக் குருக்கள் பூமிதனில் மேவி வரும்’ என்பது அய்யாவின் வாக்கு ஆகும். இறைவனுக்கு அடியவர்களாக தோன்றி மக்களுக்கு வழிகாட்டிய உன்னத ஞானிகளை பார்த்த இந்த பூமியில், உண்மையான குருக்களை காண்பது இப்போது அரிதாகிவிட்டது. இதையும் அய்யா வைகுண்டர், அகிலத்திரட்டு அம்மானை நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்மூலம் உலகிற்கு தர்மத்தை போதித்து, அவ்வழியே வாழ்ந்து காட்டி, உலகிற்கு உதாரண புருசர்களாக இருந்து வழிகாட்ட வேண்டிய குருக்கள், பொய்யான குருக்களாக இருந்து உலகை ஏமாற்றுவார்கள் என்று ஆன்மிகத்தையும் சொல்கிறார்.
‘கொலை, களவு, ரொம்பக் கோள்கள் மிகுந்திருக்கும்’ என்பதும் அய்யா வைகுண்டரின் வாக்கு ஆகும். கொலை, திருட்டு, ஒருவரை கெடுத்து மற்றொருவரிடம் சொல்கின்ற கோள் வார்த்தை போன்றவை சமூகத்தில் அதிகரிக்கும் என்பதைத் தான் இவ்வாறு அய்யா கூறியுள்ளார்.
ஸ்ரீமன் நாராயணர் தன்னுடைய கிருஷ்ண அவதாரத்தை நிறைவு செய்துவிட்டு திருவரங்கம் செல்லும் வழியில் சப்த மாதர்களை சந்தித்தார். அவர்களின் வாயிலாக ஸ்ரீமன் நாராயணருக்கு பிறந்த பிள்ளைகளே சான்றோர் மக்கள் ஆவர். அந்த மக்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கையை மாற்றி அமைப்பதற்காகவும், கலியின் சூழ்ச்சியில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்வதற்கு அருள்புரிவதற்காகவும் அவதரித்த இறைவனே ‘அய்யா வைகுண்டர்’ ஆவார்.
எல்லா அவதாரத்தின் போதும் இன்னல்களை சந்திக்கும் இறைவன், வைகுண்ட அவதாரத்தின் போதும் பல இன்னல்களை சந்தித்து, மனித சக்தி கொண்டு இறை சக்தியை வெல்ல முடியாது என்பதை உலகிற்கு காட்டினார். சான்றோர் மக்கள் மேன்மையான வாழ்க்கை வாழ தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார். மேலும் வைகுண்டமாக நாராயணர் அவதரித்திருந்தபோது சான்றோர்களைப் பெற்றெடுத்த சப்த கன்னியர்களையும் திருக்கல்யாணம் புரிந்தார்.
‘என்னுடைய பத்திரத்தை பள்ளியில் வைத்து பணிவிடைகள் செய்திடுங்கோ’ என்பது அய்யாவின் உத்தரவு ஆகும். அதாவது அய்யா வைகுண்டர் கொடுத்த மிகப் பெரிய ஈடுஇணையற்ற சொத்தான அகிலத்திரட்டு அம்மானை என்னும் பத்திரத்தை கோவிலில் வைத்து மக்கள் அறியும் வகையில் சொல்ல வேண்டும் என்பது ஆகும். அய்யாவின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் அகிலத்திரட்டு அம்மானைக்கு பாராயணம் செய்து விளக்கும் இடமாக அய்யாவின் பதிகளும், நிழல் தாங்கல்களும் விளங்குகின்றது.
17 நாட்கள் மற்றும் 10 நாட்கள் திருஏடு வாசிப்பு திருவிழா மூலமாக அகிலத்திரட்டு அம்மானையின் கருத்துகள் உலகம் அறியும் வகையில் சொல்லப்படுகின்றது. உயர்ந்த தத்துவங்களை உதிர்த்து, உழைக்கும் மக்களுக்காக பாடுபட்ட வைகுண்டப் பரம்பொருளுக்கு தமிழ்நாட்டிலும், இன்னும் பிற மாநிலங்களிலும் பரவலாக கோவில்கள் அமைந்துள்ளன.
-பா.கிருஷ்ணமணி அப்புக்குட்டி






