கூவாகம் திருவிழா.. அரவான் களப்பலிக்கு பின் தாலி அறுத்து விதவைக்கோலத்துக்கு மாறிய திருநங்கைகள்

தேர் அழிகளம் புறப்பட்டவுடன் திருநங்கைகள் சோகமயமாய் உணர்ச்சி வசப்பட்டு ஒப்பாரி வைத்து அழுதபடி தேரை பின்தொடர்ந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றம், சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து குவிந்தனர். இவர்கள் அனைவரும் தங்களை புதுமணப் பெண்கள்போல் ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு கைநிறைய வளையல்போட்டும், தலைநிறைய பூ வைத்துக்கொண்டும் கோவிலுக்கு வந்தனர்.
திருநங்கைகள்
அங்கு திருநங்கைகள், அரவானை கணவனாக நினைத்து கோவிலின் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர். அதேபோல் வேண்டுதலின்பேரிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் தாலி கட்டிக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள், தாங்கள் அரவானுக்கு மனைவிகள் ஆகிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் இரவு முழுவதும் கூட்டம், கூட்டமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
அரவான் சிரசு
விழாவின் 16-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 4 மணியளவில் கோவிலில் உள்ள அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஊர்வலமாக அரவான் சிரசு எடுத்து வரப்பட்டது. அப்போது திருநங்கைகள் சுற்றி நின்று கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
இதற்கிடையே கோவிலின் வடபுறத்தில் சகடையில் 30 அடி உயர கம்பம் நட்டு வைக்கோல்புரி சுற்றப்பட்டது. இது அரவான் திருவுருவம் அமைக்க அடிப்படை பணியாக அமைந்தது. பின்னர் கீரிமேட்டில் இருந்து மக்கள் பூஜை செய்து அரவான் புஜங்கள், மார்பு பதக்கம் எடுத்து வந்தனர். அதுபோல் சிவலியாங்குளம் கிராமத்தில் இருந்து அரசிலை, விண்குடையும், நத்தம் கிராமத்தில் இருந்து பாதம், கைகள், புஜங்களும், தொட்டி கிராமத்தில் இருந்து மார்பு புஜங்கள், கயிறு, கடையாணி ஆகியவையும் கொண்டு வரப்பட்டது. இவை அனைத்தும் வைக்கோல் புரி மீது பொருத்தி அரவான் திருவுருவம் அமைக்கப்பட்டது.
தேரோட்டம்
அதன் பின்னர் காலை 8.30 மணியளவில் தேரோட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதலின்பேரில் தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். இந்த தேர், கோவிலை சுற்றியுள்ள 4 மாட வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்தபடி வந்தது.
அப்போது விவசாயிகள், வேண்டுதலின்பேரில் விளைந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவான் சாமி மீது வீசியும், தேர் செல்லும் வழிநெடுகிலும் கற்பூரம் ஏற்றி பயபக்தியுடன் வணங்கினார்கள். இதேபோல் 20 அடி நீள பூமாலைகளையும், வல்லவாட்டுகளையும் (நீண்ட துண்டுகள்) அரவான் சாமி மீது வீசி வணங்கினர். திருநங்கைகளும், பக்தர்களும் பூக்களை பந்து, பந்தாகவும், நீண்ட மாலைகளையும் அரவான் மீது வீசி வணங்கினர். சிலர் சில்லறை நாணயங்களையும் வீசினர். தேர் செல்லும் வீதிகள்தோறும் ஆங்காங்கே பெரிய, பெரிய கற்பூரங்களை திருநங்கைகளும், பக்தர்களும் ஏற்றிவைத்து வணங்கினர். சிலர் 108, 1,008 என சூரத்தேங்காய்களையும் உடைத்து வழிபட்டனர்.
ஒப்பாரி
பின்னர் தேர் அழிகளம் நோக்கி புறப்பட்டது. அதுவரை புதுமணப் பெண்கள்போல் தங்களை ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு கூத்தும், கும்மாளமுமாக இருந்த திருநங்கைகள், தேர் அழிகளம் புறப்பட்டவுடன் சோகமயமாய் உணர்ச்சி வசப்பட்டு ஒப்பாரி வைத்து கதறி அழுதுகொண்டே வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு தேரை பின்தொடர்ந்தனர்.
விதவைக்கோலம்
பகல் 12.30 மணியளவில் அழிகளம் எனப்படும் நத்தம் கிராம பந்தலடியை தேர் சென்றடைந்தது. அதனை தொடர்ந்து அங்கு அரவான் களப்பலி நிகழ்ச்சி நடந்தது. அப்போது, திருநங்கைகள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்தனர். நெற்றியில் இருந்த குங்கும பொட்டை கோவில் பூசாரிகள் அழித்தனர். பின்னர் திருநங்கைகள் கையிலிருந்த வளையல்களை பூசாரிகள் உடைத்ததோடு அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த தாலியையும் அறுத்தனர். இதில் தங்கத்தாலிகளை அணிந்திருந்த திருநங்கைகள் பலர், அந்த தாலிகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தினர்.
பின்னர் திருநங்கைகள், அங்கிருந்த விவசாய கிணறுகளுக்கு சென்று குளித்து வெள்ளைச்சேலை அணிந்து விதவைக்கோலத்துக்கு மாறி சோகமயமாய் கூவாகத்தில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்றனர்.