பித்ருக்கள் சந்ததியினரை தேடி பூமிக்கு வரும் மகாளய பட்சம்

பித்ரு லோகத்தில் இருந்து பித்ருக்கள் வரும்போது பூமியில் உள்ள சந்ததியினர் அவர்களை நினைத்து தர்ப்பணம், தானம் போன்றவற்றை செய்தால் மகிழ்வார்கள்.
முன்னோர்களை வணங்கி, தர்ப்பணம் செய்து அவர்களின் ஆசியை பெறுவதற்கு உகந்த காலமான மகாளய பட்ச காலம் தொடங்கி உள்ளது. மகாளய பட்ச காலத்தில் வரும் அமாவாசை தினத்துக்கு முன்பு வரும் 14 நாட்களும் மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, ஆற்றல் மிகுந்தது. ஆடி அமாவாசை, தை அமாவாசையை விட பலமடங்கு உயர்வானது மகாளய பட்ச அமாவாசை.
ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்தால், யாரை நினைத்து தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ, அவர்களுக்கு மட்டுமே சென்றடையும். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று கொடுக்கும் திதி அல்லது தர்ப்பணம், மறைந்த முன்னோர்கள் அனைவருக்கும் போய் சேரும். மகாளய பட்சமான 14 நாட்கள் அல்லது மகாளய அமாவாசை நாளில் யார் ஒருவர் பித்ருக்களான முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வழங்கும் தர்ப்பணத்தை கொடுக்கிறாரோ, அந்த எள்ளும், தண்ணீரும் அவரது முந்தைய 21 தலைமுறைகளில் உள்ள பித்ருக்களை சென்றடையும். இந்த ஒரு காரணத்தினால்தான் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட புரட்டாசி மாத மகாளய பட்ச அமாவாசை உயர்வானதாக, சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மகாளய பட்ச காலங்களில் (14 நாட்கள்) கொடுக்கும் எள்-தண்ணீர் தர்ப்பணத்துக்கு ஒவ்வொரு நாள் வரும் திதிக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். மகாளய பட்சத்தின் 14 நாட்கள் சிறப்பை உணர்ந்தவர்கள் இந்த 14 நாட்களை நிச்சயம் தவறவிட மாட்டார்கள். இது மறைந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமையாக கருதப்படுகிறது.
மகாளயபட்ச நாட்களில் பித்ரு லோகத்தில் இருந்து மகாவிஷ்ணுவின் அனுமதியுடன் பித்ருக்கள் அவர்களின் சந்ததியினரை தேடி வருவார்கள். அந்த சமயத்தில் பூமியில் உள்ள சந்ததியினர் அவர்களை நினைத்து தர்ப்பணம், தானம் போன்றவற்றை செய்தால் அவர்களின் குடும்ப பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நமது வாரிசுகள் நம்மை மறக்கவில்லை. நம்மை நினைத்து வழிபட்டு ஆராதனை செய்கிறார்கள் என்று மகிழ்ச்சியால் பூரித்துப் போவார்கள். அந்த மகிழ்ச்சி காரணமாக தங்களின் ஆசிகளை பரிபூரணமாக வழங்குவதுடன், கேட்ட வரத்தை எளிதில் கிடைக்க உதவி செய்வார்கள். வாழ்க்கை அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க வழி வகை செய்வார்கள். மகாளய பட்ச வழிபாடு தரும் மிகப்பெரிய பலன் இது.
எனவே, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள் இந்த நாட்களில் தர்ப்பணம் செய்வதை மறப்பதில்லை. இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதுடன் அன்னதானம் செய்யலாம், ஆடை, குடை தானம் செய்யலாம். தர்ப்பணத்தை மறந்துவிட்டால் முன்னோர்கள் பசியோடும் தாகத்தோடும் வேதனைப்படுவதாகவும், நமது வாரிசுகள் நம்மை மறந்து விட்டார்களே என்று மனதில் கவலை கொள்வார்கள். அந்த கவலையும், வேதனையும் தான் அவர்களது வாரிசுகளுக்கு தோஷங்களாக மாறி விடும். இதைத்தான் ஜோதிடர்கள் பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபம் என்று சொல்வார்கள்.
இத்தகைய தோஷம் ஏற்படுவதை தவிர்க்க முன்னோர்களுக்கு உரிய வகையில் அவர்களின் தாகம் தீர எள் தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் கொடுக்கிறார்கள்.






