மைசூரு தசரா விழாவில் ஜம்பு சவாரி.. தங்க அம்பாரியில் யானை மீதேறி வலம் வரும் சாமுண்டீஸ்வரி அம்மன்
தங்க அம்பாரியில் அமர்ந்தபடி வலம் வரும் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்வதற்காக அரண்மனை வளாகம் மற்றும் ஊர்வல பாதைகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா ஆகும். கர்நாடகத்தின் ‘நாட ஹப்பா’ என அழைக்கப்படும் தசரா விழா கடந்த மாதம் 22-ந்தேதி முதல் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி மைசூரு நகரம் மற்றும் அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இளைஞர் தசரா, உணவு மேளா, தசரா கண்காட்சி, மலர் கண்காட்சி, திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மைசூரு அரண்மனையிலும் பாரம்பரியம், கலாசார முறைப்படி தசரா விழா மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அரண்மனை வளாகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தசரா விழாவையொட்டி மன்னர் யதுவீர் எம்.பி. தனியார் தர்பார் நடத்தினார்.
இந்நிலையில் தசரா விழாவின் நிறைவு நாள் நிகழ்வான ஜம்பு சவாரி இன்று நடைபெறுகிறது. இதற்காக யானைகள் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மைசூர் சாமுண்டி மலை சாமுண்டீஸ்வரி கோவிலில் இருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனின் தங்க சிலையை பட்டு சேலை மற்றும் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அந்த சிலை சாமுண்டி மலையிலிருந்து அரண்மனைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. வரும் வழியெங்கும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
அரண்மனையில் மன்னர் யதுவீர் உடையார், உற்சவமூர்த்திக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அதன்பின் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் (உற்சவர்) எழுந்தருளினார். அவர் எழுந்தருளியதும் தங்க அம்பாரியை சுமந்து கொண்டு யானை ஊர்வலமாக புறப்பட்டது. அந்த யானையைத் தொடர்ந்து பிற யானைகள் அணிவகுத்து செல்கின்றன. ஊர்வலத்தில், கண்கவர் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தியபடி கலைஞர்கள் அணிவகுத்து செல்கின்றனர். யானை மீதேறி சாமுண்டீஸ்வரி அம்மன் அசைந்தாடி வரும் அழகை கண்டு தரிசனம் செய்வதற்காக அரண்மனை வளாகம் மற்றும் ஊர்வல பாதைகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்துள்ளனர். இதையொட்டி மைசூரு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் சிமோகாவிலும் இன்று கோட்டை துர்காபரமேஸ்வரி கோவிலில் இருந்து சாமுண்டீஸ்வரி அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அம்பாரியில் எழுந்தருளிய அம்மனை சுமந்தபடி யானை சாகர் பீடு நடை போட்டு சென்றது.








