ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் நாக சதுர்த்தி உற்சவம்

ஸ்ரீகாளஹஸ்தி நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாம்பு புற்றுகளில் உள்ளூர் மக்கள், பக்தர்கள் பூஜைகள் செய்தும், தீபம் ஏற்றியும், பாம்பு புற்றுக்கு முட்டை வைத்து, பால் ஊற்றி வழிபட்டனர்.
தெலுங்கு கார்த்திகை மாதத்தில் சேஷ வழிபாட்டுக்கு பக்தர்கள் அதிக முன்னுரிமை அளிக்கின்றனர். நாக தோஷம் நீங்கவும், அனைத்துக் குடும்பங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் நீங்கி சுபிட்சமாக வாழவும், மன அமைதிக்காகவும் நாக சதுர்த்தி அன்று நாகர் சிலைகளுக்கும், பாம்பு புற்றுக்கும் பால் ஊற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
அதன்படி நேற்று நாக சதுர்த்தி உற்சவம் கடைப்பிடிக்கப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் ஜல விநாயகர் சன்னதி அருகில் சூரிய பகவான் கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு அர்ச்சகர்கள் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்தனர். அதில் பங்கேற்ற பெண் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாம்பு புற்றுகளில் உள்ளூர் மக்கள், பக்தர்கள் பூஜைகள் செய்தும், தீபம் ஏற்றியும், பாம்பு புற்றுக்கு முட்டை வைத்து, பால் ஊற்றி வழிபட்டனர்.
புற்றுக்கு பால் ஊற்றி வழிபாடு
சித்தூரை அடுத்த எஸ்டேட் ஆட்டோ நகர் பகுதியில் பிரசித்திப் பெற்ற சுயம்பு நாகாலம்மன் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று நாக சதுர்த்தியையொட்டி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியபொடி போன்றவற்றால் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும், பலவண்ணமலர்களால் அலங்காரமும் நடந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அங்குள்ள புற்றுக்கு பால் ஊற்றி, மஞ்சள் நூல் கட்டி வழிபட்டனர். திருமணம் ஆகாத பெண்கள் நாகதோஷத்துக்காக பரிகார பூஜை செய்து தரிசனம் செய்தனர்.






