8 ஆண்டுகளுக்குப் பின் மஞ்சமலை அய்யனார் கோவில் புரவி எடுப்பு உற்சவ விழா
பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதையொட்டி குதிரை சிலைகள், சாமி சிலைகள் மற்றும் பல்வேறு வகையான சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஜமீன் கிராமத்தில் அமைந்துள்ள மஞ்சமலை அய்யனார், ஈரடி கருப்புசாமி திருக்கோவில். இக்கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு உற்சவ திருவிழா நேற்று மாலையில் விமரிசையாக நடந்தது.
விழாவையொட்டி, அரசம்பட்டி மந்தை திடலில் இருந்து ஸ்ரீ மஞ்சமலை அய்யனார், ஈரடி கருப்புசாமி உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்களின் சிலைகள், குதிரை சிலைகள் மேலும் பல்வேறு வண்ணமயமான சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் சுவாமிக்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.
சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் தங்களது வேண்டுதல் நிறைவேறியதையொட்டி குதிரைகள், காளைகள் மற்றும் சுவாமி சிலைகள், குழந்தை பொம்மை சிலைகள், பைரவர், வீடு, ஆட்டோ, உள்ளிட்ட பல்வேறு வகையான சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர்.








