ராம நவமி 2025: பகவான் ஸ்ரீ ராமருக்கு நீர்மோர், பானகம் படைப்பது ஏன்?


ராம நவமி 2025: பகவான் ஸ்ரீ ராமருக்கு நீர்மோர், பானகம் படைப்பது ஏன்?
x

ஸ்ரீ ராமர் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் தானமாக வழங்கலாம்.

பகவான் ஸ்ரீ ராமரின் அவதார தினமான ராம நவமி விழா இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம், வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து, அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்துக்குப் பூக்களை சூடி நைவேத்தியங்களைப் படைத்து, ஸ்ரீ ராம நாமம் சொல்லி பூஜிப்பது சிறப்பு.

ராம நவமியான இன்றைய தினம் ராமருக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமாகும். இதற்கு காரணமும் உள்ளது. ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன்பின், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின்போதும், எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார் பகவான் ஸ்ரீராமர். நீர்மோரையும், பானகத்தையும் தாகத்திற்காக அருந்தினார். அதன் நினைவாகவே, நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமரின் அவதார தினமான ராம நவமி அன்று நிவேதனப் பொருட்களாகப் படைக்கப்படுகின்றன. இந்த எளிய நைவைத்தியத்தை படைத்து வழிபட்டாலே போதும், ஸ்ரீராமபிரான் மனம் குளிர்ந்து பக்தர்களுக்கு அருளாசிகளை வாரி வழங்குவார் என்பது ஐதீகம்.

இதுதவிர, வெண்பொங்கல், பருப்பு வடை போன்றவற்றையும் நிவேதனம் செய்து, பிரசாதமாக சாப்பிடலாம். ஸ்ரீ ராமர் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் தானமாக வழங்கலாம். விசிறி, செருப்பு, குடை போன்றவைகளையும் தானமாக கொடுக்கலாம்.

பெரிய அளவில் நைவேத்தியம் படைக்கவேண்டும் என்பதில்லை. ராமர் பட்டாபிஷேக படத்தின் முன்பாக வாழைப்பழம், பால் போன்ற எளிய பொருட்களை அர்ப்பணித்தும், ஸ்ரீ ராம நாமம் சொல்லியும் ஸ்ரீ ராமரை வணங்கி அருள் பெறலாம்.

ராம நவமி நாளில் ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும். ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். விரதம் இருக்கும் பக்தர்கள் முடிந்தால் முழு நாளும் விரதம் இருக்கலாம். அவ்வாறு முடியாதவர்கள் பகல் மட்டும் உணவு உட்கொள்ளாமல் இரவு பூஜை முடிந்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

1 More update

Next Story