25 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த சப்த மாதா கோவில் குடமுழுக்கு


25 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த சப்த மாதா கோவில் குடமுழுக்கு
x

விமான குடமுழுக்கைத் தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் கிராமத்தில் சப்த மாதா எனும் பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 27ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து யாகசாலையில் புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. நான்கு கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று காலையில் கடம் புறப்பாடு நடைபெற்றது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களுடன் அர்ச்சகர்கள் கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தனர்.

தொடர்ந்து வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமி ராஜாகுருக்கள் தலைமையில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து அகோர வீரபத்திர சாமி, பதினெட்டாம்படி கருப்பசாமி, வீரனார் சாமி, பேச்சாயிசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தேரழுந்தூர் கிராமவாசிகள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story