சிங்கம்புணரியில் கழுவன் விரட்டு திருவிழா

பயமுறுத்தும் கருப்பு திருமேனியுடன் தீப்பந்தங்கள் ஏந்தியவாறு ஓடி வந்த கழுவனை கண்டு இளைஞர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை ஐந்தாம் நாள் திருவிழாவில், திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு ஆறாம் நாள் திருவிழாவான கழுவன் திருவிழா (கழுவன் விரட்டு திருவிழா) நடைபெற்றது.
நள்ளிரவு 2 மணியளவில் நடைபெற்ற திகிலூட்டும் இந்த நிகழ்ச்சியில். கருப்பு திருமேனியுடன் ஜடாமுடி அணிந்து கோர உருவத்துடன் கழுவன் வேடமிட்ட ஒருவரை கயிற்றால் கட்டி கோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு அமர்ந்திருந்த நாட்டார்களிடம் மரியாதை நிமித்தமாக வணங்கி சேவுகப்பெருமாள் சன்னதியில் அவருக்கு திருநீறு தீர்த்தம் சிவாச்சாரியார்களால் வழங்கப்பட்டது. பின்னர் நாட்டார்கள் அவருக்கு வேஷ்டி பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர்.
பின்னர் கழுவன் வேடத்தில் இருந்தவரை இளைஞர்கள் விரட்டிச் சென்றனர். அப்போது கழுவன் வேடமிட்டவர் தீப்பந்தத்தை காட்டி அவர்களை விரட்டினார். பயமுறுத்தும் கருப்பு திருமேனியுடன் தீப்பந்தங்கள் கைகளில் ஏந்தியவாறு ஓடி வந்த கழுவனை கண்டு இளைஞர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.






