சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ சங்கர ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் செய்யப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 21-ம் தேதி புதன்கிழமை மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.
இன்று அதிகாலையில் விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, நாடி சந்தானம், யாத்ரா தானம் ஆகிய நிகழ்வுகளைத் கடம் புறப்பட்டு ஆலயம் வலம் வந்தது. இதையடுத்து காலை 6 மணிக்கு கோமதி அம்பாள் சமேத சங்கர ஈஸ்வரர் விமான மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. நள்ளிரவில் சுவாமி, அம்பாள் கற்பகப் பொன் சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.








