புனித அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

திருத்தேர் பவனியின்போது கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுவர்த்தி ஏந்தி தேரினை வரவேற்று பிரார்த்தனை செய்தனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா விமரிசையாக நடைபெற்று வந்தது.
ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித சம்மனசு, புனித ஆரோக்கிய மாதா, புனித அந்தோணியார் ஆகியோர் எழுந்தருளி பவனி வந்தனர். முன்னதாக பங்கு தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் கூட்டு பாடல், திருப்பலி நடைப்பெற்றது.
தேர்பவனியின் போது ஒவ்வொரு வீடுகளிலும் கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுவர்த்தி ஏந்தி தேரினை வரவேற்று புனித சம்மனசு, புனித ஆரோக்கிய மாதா, புனித அந்தோணியாருக்கு மாலை அணிவித்து சாம்பிராணி காட்டி பிரார்த்தனை செய்தனர். இன்று காலை பங்குத்தந்தை ஆரோக்கியசாமியால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருக்கொடி இறக்கப்பட்டது.






