துபாயில், 'பிட்னெஸ் சேலஞ்ச்' நாளை மறுநாள் தொடங்குகிறது


துபாயில், பிட்னெஸ் சேலஞ்ச் நாளை மறுநாள் தொடங்குகிறது
x
தினத்தந்தி 25 Oct 2023 9:00 PM GMT (Updated: 25 Oct 2023 9:00 PM GMT)

துபாயில் ‘பிட்னெஸ் சேலஞ்ச்' எனப்படும் உடற்பயிற்சி முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இது குறித்து பட்டத்து இளவரசர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துபாயில் கடந்த 2017-ம் ஆண்டு பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் முயற்சியில் 'பிட்னெஸ் சேலஞ்ச்' என்ற தலைப்பில் உடற்பயிற்சிக்கான சவால் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. எந்திரமயமான நகர்புற வாழ்க்கையில் துபாயில் வசிக்கும் மக்கள் நல்ல தேக ஆரோக்கியத்துடனும், உடற்கட்டை நல்ல முறையில் பராமரிக்கவும் தினசரி உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி நவம்பர் மாதம் வரை 30 நாட்கள் தினமும் 30 நிமிடங்கள் என்ற கருப்பொருளில் உடற்பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பதிவு செய்து கொண்டு இலவசமாக கலந்துகொள்ளலாம். கொடுக்கப்படும் உடற்பயிற்சி சவால் நிகழ்ச்சிகளில் கொடுக்கப்படும் இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும்.

நாளை மறுநாள் தொடங்குகிறது

கடந்த 2022-ம் ஆண்டில் இந்த நிகழ்ச்சிகளில் மொத்தம் 22 லட்சம் பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். குறிப்பாக ஷேக் ஜாயித் சாலையில் நடந்த சைக்கிள் ஓட்டத்தில் ஒரே நேரத்தில் 35 ஆயிரம் பேரும், துபாய் ரன் என்ற தலைப்பில் நடந்த ஓட்ட பந்தயத்தில் 1 லட்சத்து 93 ஆயிரம் பேரும் ஒரே நேரத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது 7-முறையாக நடப்பு ஆண்டில் 'பிட்னெஸ் சேலஞ்ச்' உடற்பயிற்சி முகாம்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதில் அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி 'துபாய் ரைட்' என்ற தலைப்பில் சைக்கிள் பந்தயமும், துபாய் ரன் என்ற தலைப்பில் ஓட்ட பந்தயம் இறுதி நாளான 26-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது அரசுத்துறைகள் சார்பில் நடப்பு ஆண்டின் பிட்னெஸ் சேலஞ்ச் குறித்த முழு விவரங்கள் வெளியிட்டது. இதில் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் ஆகியவைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story