நவம்பர் 5-ந் தேதி ராணுவ காட்சி: பீரங்கிகள், ஹெலிகாப்டர்களுடன் யாஸ் தீவில் ஒத்திகை தீவிரம்


நவம்பர் 5-ந் தேதி ராணுவ காட்சி: பீரங்கிகள், ஹெலிகாப்டர்களுடன் யாஸ் தீவில் ஒத்திகை தீவிரம்
x

அபுதாபி யாஸ் தீவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி நடக்கும் ராணுவ காட்சிக்காக பீரங்கி, ராணுவ ஹெலிகாப்டர்களுடன் ராணுவ பாதுகாப்பு ஒத்திகை நேற்று தீவிரமாக நடந்தது.

அபுதாபி,

அபுதாபி யாஸ் தீவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி நடக்கும் ராணுவ காட்சிக்காக பீரங்கி, ராணுவ ஹெலிகாப்டர்களுடன் ராணுவ பாதுகாப்பு ஒத்திகை நேற்று தீவிரமாக நடந்தது.

இது குறித்து அமீரக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரக ராணுவத்தின் பெருமையை உலகறிய செய்யும் வகையிலும், நாட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு ராணுவத்தின் செயல்திறனை காண்பித்து ஊக்கப்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் 'யூனியன் போர்ட்ரஸ்' எனப்படும் ராணுவ காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ராணுவ காட்சியில் அமீரக முப்படை ராணுவத்தினரின் செயல்திறனை காட்டும் வகையில் பல்வேறு செயல்முறை பயிற்சிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இதில் ராணுவத்தில் பயன்படுத்தும் பீரங்கி, ஹெலிகாப்டர், போர்க்கப்பல்களுடன் ராணுவ வீரர்கள் பங்கேற்கும் போர்க்காட்சிகளும் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டப்படுகிறது. மேலும் ராணுவ வீரர்கள் நவீன ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளுடன் போரிடுவது போன்ற காட்சிகளும் சித்தரிக்கப்படுகிறது. இதுபோன்ற போர்க்காட்சிகளை பொதுமக்கள் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பயங்கர வெடிச்சத்தம்

இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்காக ராணுவ ஒத்திகை நேற்று அபுதாபி யாஸ் தீவு பகுதியில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. புகைப்படங்கள் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. யாஸ் தீவில் தரைப்படை ராணுவ ஒத்திகையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகள் பயன்படுத்தப்படுகிறது.

குண்டுகள் முழங்க நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை காரணமாக அந்த பகுதி முழுவதும் பயங்கர வெடிச்சத்தம் அதிர்வுடன் கேட்டது. தொடர்ந்து இதுபோன்ற சத்தங்கள் கேட்கும் என பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு ஒத்திகை

குறிப்பாக நேற்று பீரங்கிகள் முன்னோக்கி நகர்வது, ஹெலிகாப்டர்கள் மூலம் சாகசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இந்த பாதுகாப்பு ஒத்திகைகள் அனைத்தும் ராணுவ காட்சி நிகழ்ச்சியில் செய்து காட்டப்பட உள்ளது.

இதனை அனைவரும் நேரில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி காண வேண்டும் என அமீரக பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெரிய திரைகளிலும் இந்த ராணுவ காட்சிகள் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story