செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த புதிய தரவுகள்: அமீரகத்தின் 'ஹோப்' விண்கலம் வெளியிட்டது


செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த புதிய தரவுகள்: அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெளியிட்டது
x
தினத்தந்தி 26 Oct 2023 9:00 PM GMT (Updated: 26 Oct 2023 9:00 PM GMT)

அமீரகத்தின் சார்பில் விண்ணில் ஏவப்பட்டு செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்து வரும் ‘ஹோப்’ விண்கலம் சேகரித்த புதிய விரிவான தரவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

துபாய், அக்.27-

இது குறித்து அமீரக செவ்வாய் கிரக ஆய்வு திட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரக செவ்வாய் கிரக ஆய்வு திட்டத்தில் தொடர்ச்சியான தரவுகள் வெளியிடுவதில் விரிவான 9-வது தரவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவுகள் செவ்வாய் கிரகத்தின் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வுகளுக்கு முக்கியமான தகவல்களை வழங்குவதாக உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் எதிர்பார்க்கப்படும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும் சில நுட்பமான வேறுபாடுகளை கண்டறிய இந்த தரவுகள் உதவிகரமாக இருக்கும். அமீரகத்தின் ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தின் மேற்பரப்பில் இருந்து தரைப்பகுதி வரையுடைய தினசரி வானிலை மாற்றங்களை கண்காணித்து தரவுகளை சேகரித்து வருகிறது.

தரவுகள் வெளியீடு

இந்த தரவுகளில் இருந்து செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து பூமியில் 2 ஆண்டுக்கு சமமான நாட்களில் நடந்து வரும் வளிமண்டல மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் வளிமண்டலத்தில் ஏற்படும் வருடாந்திர மாற்றங்களை அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக அந்த கிரகத்தின் பருவகால மாற்றங்களை துல்லியமாக தெரிந்துகொள்ள இந்த தரவுகள் பயனுள்ளதாக உள்ளது.

தொடர்ந்து ஹோப் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல பகுதியில் உள்ள மேகங்கள் மற்றும் தூசு படலங்களின் அடர்த்தியை ஆய்வு செய்து வருகிறது. இதற்காக பிரத்யேக உணரும் கருவிகள் மற்றும் அதிநவீன கேமராக்களை ஹோப் விண்கலம் பயன்படுத்தி வருகிறது.

குறிப்பாக இ.எக்ஸ்.ஐ டிஜிட்டல் கேமரா, அகச்சிவப்பு கதிர்கள் மூலம் செயல்படும் நிறமாலை மானி மற்றும் புற ஊதா நிறமாலை மானி ஆகிய கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு படம் பிடிக்கப்படுகிறது. இதில் காந்தப்புலங்களின் ஒளிவட்டமும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3.3 டெரா பைட் அளவிலான தரவுகளை ஹோப் விண்கலம் வெளியிட்டுள்ளது. தற்போது 9-வது கட்டமாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் தரவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story