'பாலஸ்தீன மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்'; துபாய் பட்டத்து இளவரசர் சமூக வலைத்தளத்தில் பதிவு


பாலஸ்தீன மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்; துபாய் பட்டத்து இளவரசர் சமூக வலைத்தளத்தில் பதிவு
x
தினத்தந்தி 22 Oct 2023 7:00 PM GMT (Updated: 22 Oct 2023 7:00 PM GMT)

இஸ்‌ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில் பாலஸ்தீன மக்களுக்காக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

துபாய்,

பாலஸ்தீன போராளி குழுவான ஹமாஸ் கடந்த 7-ந் தேதி அன்று இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியது. அதனை தொடர்ந்து 45 கி.மீ பரப்பளவுடைய காசா பகுதி இஸ்ரேலின் குண்டு வீச்சுக்கு உள்ளானது. 10 லட்சம் பேரை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை வெளியிட்ட நிலையில் அமீரகம் இது ஒரு சாத்தியமற்ற கோரிக்கை என அறிவித்தது.

அமீரகம் சார்பில் போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் அமீரகம் சார்பில் உயிர் காக்கும் பொருட்களை காசா பகுதிக்கு கொண்டு செல்வதற்காக விமான சேவை திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மோதல் தீவிரமடைந்த நிலையில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் மந்திரிகள் உலக தலைவர்களுடன் இடை விடாமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலஸ்தீன மக்களுக்காக தான் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் பாலஸ்தீன பகுதியில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலின் முன்பு கொடியை அசைக்கும் ஒரு நபரின் படத்தை வெளியிட்டுள்ளார். அதில் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் `பாலஸ்தீனம்' என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


Next Story