பங்குச்சந்தைகளில் தொடர்ந்து ஏற்றம்.. சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்வு


பங்குச்சந்தைகளில் தொடர்ந்து ஏற்றம்.. சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 31 Jan 2025 5:42 PM IST (Updated: 31 Jan 2025 5:43 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய வர்த்தகத்தின் நிறைவில் சென்செக்ஸ் 740.76 புள்ளிகள் உயர்ந்து 77,500.57 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பை:

இந்திய பங்குச்சந்தைகள் நான்காவது நாளாக இன்றும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. வாரத்தின் இறுதி நாளான இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே குறியீட்டு எண்கள் அதிகரித்தது.

பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்ற சாதகமான அம்சம், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் போன்றவை முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தின. குறிப்பாக, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கினர். மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகத்தின் நிறைவில் சென்செக்ஸ் 740.76 புள்ளிகள் உயர்ந்து 77,500.57 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 846.15 புள்ளிகள் உயர்ந்து 77,605.96 புள்ளிகள் வரை சென்றது.

இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் சாதகமான போக்கு காணப்பட்டது. நிப்டி 258.90 புள்ளிகள் அதிகரித்து 23,508.40 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 297.3 புள்ளிகள் உயர்ந்து 23,546.80 புள்ளிகள் வரை சென்றது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 4.31 சதவீதம் உயர்ந்தது. அந்த நிறுவனம் தனது மூன்றாம் காலாண்டில் லாபம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.3,359 கோடியாக அதிகரித்ததாக கூறியிருந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் உயர்வடைந்தன.

இதேபோல் மூன்றாம் காலாண்டில் நெஸ்லே நிறுவனத்தின் நிகர லாபம் 4.94 சதவீதம் அதிகரித்து ரூ.688.01 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்ததை அடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் 4.25 சதவீதம் உயர்வடைந்தன.

இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பும் உயர்ந்தது.

ஐடிசி ஹோட்டல், பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.26 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 76.64 டாலராக இருந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் அதிகரித்து ரூ.86.59 ஆக உள்ளது.

1 More update

Next Story