காற்றாலை மின் உற்பத்தி திறனை 100 ஜிகாவாட்டாக உயர்த்த இலக்கு

காற்றாலை மின் உற்பத்தி திறனை 100 ஜிகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட இடங்களில் 8,152 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 11 ஆயிரத்து 800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. காற்றாலை மின் உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும்.
அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில். நிறுவப்பட்ட காற்றாலைகள் அடிப்படையிலான மின்சார உற்பத்தி திறனை 2030-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு எட்டக்கூடியதுதான் என்று சுஸ்லான் குழுமத்தின் இணை நிறுவனர் கிரிஷ் டன்டி கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
இந்தியாவின் நிறுவப்பட்ட காற்றாலைகளின் உற்பத்தி திறன் 53 ஜிகாவாட்டாக உள்ளது. சூரியன் இல்லாத நேரத்தில் கூட காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பது சாதகமான அம்சம். எனவே, இந்த இலக்கை எட்டி விடலாம்.புதைபடிம எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தி திறனை 500 ஜிகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவும் எட்டக்கூடியதுதான். இவ்வாறு அவர் கூறினார்.






