தபால் துறையில் 28 ஆயிரம் பணியிடங்கள்: 10 ஆம் வகுப்பு மார்க் வைத்து வேலை- அருமையான வாய்ப்பு

இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு வரும் 31ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14ஆம் தேதி வரை இருக்கும்.
2026ஆம் ஆண்டுக்கான அஞ்சல் துறை வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கிளை போஸ்ட் மாஸ்டர், உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர், அஞ்சல் பணியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 28,740 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 2,009 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கர்நாடகாவில் 1,023, ஆந்திராவில் 1,060, கேரளாவில் 1,691, தெலுங்கானாவில் 609, என மொத்தம் 28,740 பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு வரும் 31ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14ஆம் தேதி வரை இருக்கும். மேலும், விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 16ஆம் தேதியாகும்.
கல்வித்தகுதியை பொறுத்தவரை 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
மாத சம்பளத்தை பொறுத்தவரையில், கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) பணிக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470, உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) பணிக்கு ரூ.12,000 முதல் ரு.29,380 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறிவிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்க http://indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தை பாருங்கள்.






