வாழ்க்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் வணிக படிப்புகள்... முழு விவரம்

கோப்புப்படம்
தொழில்முனைவோரை உருவாக்க வணிக படிப்புகள் துணை நிற்கின்றன.
இன்றைய சூழலில் வணிகம் நாட்டின் முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொருட்களை உற்பத்தி செய்து அதனை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சரியான முறையில் விநியோகம் செய்யும் முறையை "வணிகம்" (COMMERCE ) எனக் குறிப்பிடுகிறோம். இந்திய திருநாட்டின் உற்பத்தியை அதிகரிக்கவும் வணிக மேம்பாட்டிற்கான அடிப்படை செயல்பாடுகளை அமைக்கவும் “வணிகம்” மிக முக்கியமாக கருதப்படுகிறது.
பல்வேறு தொழில் நிறுவனங்கள், வணிக அமைப்புகள், சேவை நிறுவனங்கள் என பலவற்றிலும் வணிகம் மூலமாக ஏராளமான வேலை வாய்ப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்தப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்க ஆலோசனைகளை வழங்கவும், புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், பல ஸ்டார்ட் அப் கம்பெனிகளை நிறுவவும் வணிக படிப்புகள் பக்க பலமாக அமைகின்றன. குறிப்பாக, தொழில்முனைவோரை உருவாக்க வணிகப்படிப்புகள் துணை நிற்கின்றன.
உலக அளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றை பற்றி புரிந்து கொள்ளவும், வெளிநாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தும் விதத்தில் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவிகரமாக அமையவும் வணிக செயல்பாடுகள் உதவிகரமாக அமைகின்றன. வளர்ந்து வரும் இ-காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ,ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் போன்றவற்றிலும் வணிக படிப்புகள் கவனம் செலுத்துவதால் வணிகப்படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இன்று ஏராளமான வணிகப் படிப்புகள் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பல மாணவ, மாணவிகளும் இந்த படிப்புகளில் விரும்பி சேர்ந்து படிக்கிறார்கள். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேரடியாக வணிகம் சம்பந்தப்பட்ட பி.காம், பி.பி.ஏ டிப்ளமோ போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். தமிழகம் முழுவதும் ஏராளமான கல்வி நிறுவனங்களிலும், பல கல்லூரிகளிலும் இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் எம்.பி.ஏ போன்ற படிப்புகள் பல்கலைக்கழகங்கள் சில முக்கிய கல்வி நிறுவனங்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன.
இனி, வணிகவியல் சம்பந்தப்பட்ட முக்கியமான படிப்புகள் பற்றிய விபரங்களை பார்ப்போம்.
இளநிலை (UG) வணிகவியல் பாடப்பிரிவுகள்
வணிகவியலில் ஏராளமான பட்டப் படிப்புகள் உள்ளன. சில இளநிலைபட்டப் படிப்புகள் (UNDER GRADUATE DEGREE COURSES) பற்றிய விவரங்கள்
• வணிகவியல் இளநிலை B.Com (Bachelor of Commerce)
• வணிகவியல் (பொது) B.Com (General)
• வணிகவியல் (கணக்கியல் மற்றும் நிதி) B.Com (Accounting & Finance)
• வணிகவியல் (வங்கியியல் மற்றும் காப்பீடு) B.Com (Banking & Insurance)
• வணிகவியல் (நிறுவனச் செயலாளர்) B.Com (Corporate Secretaryship)
• வணிகவியல் (கணினி பயன்பாடுகள்) B.Com (Computer Applications)
• வணிகவியல் (தகவல் அமைப்பு மேலாண்மை) B.Com (Information Systems Management)
• வணிகவியல் (தொழில்முறை கணக்கியல்) B.Com (Professional Accounting)
• வணிகவியல் (மாண்புப் பட்டம்) B.Com (Honours)
• வணிகவியல் (வரிவிதிப்பு) B.Com (Taxation)
• வணிகவியல் (செலவு மற்றும் மேலாண்மை கணக்கியல்) B.Com (Cost & Management Accounting)
• வணிகவியல் (சர்வதேச வணிகம்) B.Com (International Business)
• வணிகவியல் (மின்னணு வாணிபம்) B.Com (E-Commerce)
• வணிக நிர்வாக இளநிலை BBA (Bachelor of Business Administration)
• வணிக மேலாண்மை இளநிலை BBM (Bachelor of Business Management)
முதுநிலை (PG) வணிகவியல் பாடப்பிரிவுகள்
வணிகவியலில் ஏராளமான முதுநிலை பட்டப் படிப்புகள் (POST GRADUATE DEGREE COURSES) உள்ளன. அவற்றுள் சில படிப்புகள் பற்றிய விவரங்கள்.
• வணிகவியல் - முதுநிலை M.Com (Master of Commerce)
• வணிகவியல் (பொது) - முதுநிலை M.Com (General)
• வணிகவியல் (கணக்கியல் மற்றும் நிதி) - முதுநிலை M.Com (Accounting & Finance)
• வணிகவியல் (நிறுவனச் செயலாளர்) – முதுநிலை M.Com (Corporate Secretaryship)
• வணிகவியல் (வங்கியியல் மற்றும் காப்பீடு) – முதுநிலை M.Com (Banking & Insurance)
• வணிகவியல் (சர்வதேச வணிகம்) – முதுநிலை M.Com (International Business)
• வணிக நிர்வாக முதுநிலை MBA
• வணிக நிர்வாக முதுநிலை (நிதி / வங்கியியல் / சந்தைப்படுத்தல் / மனிதவள மேலாண்மை / செயல்பாடுகள்) MBA (Finance / Banking / Marketing / HR / Operations)
தொழில்முறை / ஒருங்கிணைந்த வணிகவியல் பாடப்பிரிவுகள்
வணிகவியல் படிப்புகளில் சில தொழில்மறை மற்றும் ஒருங்கிணைந்த வணிகவியல் பாடப்பிரிவுகள் உள்ளன. அவை பற்றிய விவரங்கள்.
• சாசன கணக்காளர் C.A (Chartered Accountant)
• நிறுவனச் செயலாளர் C.S (Company Secretary)
• செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் C.M.A (Cost & Management Accountant)
• சாசன நிதி பகுப்பாய்வாளர் C.F.A (Chartered Financial Analyst)
• சர்வதேச சாசன கணக்கியல் சான்றிதழ் ACCA
• ஒருங்கிணைந்த வணிகவியல்+ C.A / C.S / C.M.A. (Integrated B.Com + C.A / C.S / C.M.A)
டிப்ளமா / சான்றிதழ் வணிகவியல் பாடப்பிரிவுகள்
வணிகவியல் தொடர்புடைய சில டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் பற்றிய விபரம்
• கணக்கியல் டிப்ளமா (Diploma in Accounting)
• வங்கியியல் டிப்ளமா (Diploma in Banking)
• நிதி மேலாண்மை டிப்ளமா (Diploma in Financial Management)
• வரிவிதிப்பு டிப்ளமா (Diploma in Taxation)
• டாலி கணக்கியல் சான்றிதழ் (Certificate in Tally)
• ஜிஎஸ்டி சான்றிதழ் (Certificate in GST)
• வணிக பகுப்பாய்வு சான்றிதழ் (Certificate in Business Analytics)
தேர்ந்தெடுப்பதில் கவனம்
பொதுவாக பிளஸ் 2 படித்த மாணவர்கள் வணிகப் படிப்புகளை அதிகமாக தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்கள் இல்லாமல் வணிகத்தை மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த வணிக படிப்புகள் நடத்தப்படுகின்றன. இருந்தபோதும், புள்ளியியல், கணக்கியல், தணிக்கையியல், போன்ற பாடங்கள் வணிகப் படிப்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மாணவ, மாணவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
வணிக படிப்பை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுக்கும்போது உண்மையிலேயே வணிகப் படிப்பின் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? என்பதை தீர்மானித்துக் கொள்வது அவசியம். "வணிகப் படிப்புகளை எளிதில் படித்து விடலாம்" என்ற எண்ணத்தில் சேர்ந்த சில மாணவ, மாணவிகள் அந்த படிப்பில் சேர்ந்தபின்பு, அதிக அக்கறை காட்டுவதில்லை. இதனால், வணிக படிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ள வேலைவாய்ப்பை உடனடியாகப்பெறும் தகுதியை இழக்கும் வாய்ப்பும் ஏற்படுகிறது. எனவே, அதிக ஆர்வத்துடன் இந்த வணிக படிப்பில் சேர்வது அவசியமாகும்.
ஏராளமான வேலை வாய்ப்புகள்
வணிகப் படிப்பை முடித்தவர்களுக்கு அவர்களது படிப்புகளுக்கு ஏற்றவாறு சிறந்த வேலை வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக , நிதித்துறையில் ஜூனியர் அசிஸ்டன்ட் (JUNIOR ASSISTANT), அக்கவுண்ட் எக்ஸிக்யூட்டிவ் (ACCOUNT EXECUTIVE), அக்கவுண்ட் அசிஸ்டன்ட்(ACCOUNT ASSISTANT), டேலி ஆப்பரேட்டர் (TALLY OPERATOR) போன்ற பணி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
தொழில் நிறுவனங்களிலும் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் (MARKETING EXECUTIVE), சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் (SALES EXECUTIVE), கஸ்டமர் ரிலேஷன்ஷிப் எக்ஸிக்யூட்டிவ் (CUSTOMER RELATIONSHIP EXECUTIVE), பிசினஸ் சப்போர்ட் அனலிஸ்ட் (BUSINESS SUPPORT ANALYST), இஆர்பி ட்ரெயினிங் (ERP TRAINING) போன்ற பணிகள் அளிக்கப்படுகின்றன.
வணிகத்தில் உயர் கல்வி படித்தவர்களுக்கு ஜிஎஸ்டி ப்ராக்டிஸ்னர் (GST PRACTIONER), இன்கம்டேக்ஸ் கன்சல்டன்ட் (ஜூனியர்) (INCOME TAX CONSULTANT-JUNIOR), டிஜிட்டல் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் (DIGITAL MARKETING EXECUTIVE), டேட்டா அனலிஸ்ட், (DATA ANALYST) போன்ற சிறந்த பணிகளும் வழங்கப்படும்.






